ஜே.ஜே., வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட படங்களில் இயக்குனர் சரண் உதவி இயக்குனராக பணியாற்றியவர் திருவாரூர் பாபு.
திருவாரூர் பாபுவின் இயற்பெயர் பாபு காமராஜ். இவர் பாபு K.விசுவநாத் என்ற பெயரில் கரண் நடித்த கந்தா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். நாயகி மித்ரா. இந்த படத்திற்குப் பிறகு இவர் விஜய் படமான காவலனில் இரண்டாவது நாயகியாக நடித்தவர்.
பள்ளியிலும், கல்லூரியிலும் எனக்கு படிப்பில் உதவியவர்கள் மூன்று ஆசிரியர்களே. இன்னும் எத்தனையோ சிறப்பான ஆசிரியர்களையும் பார்த்திருக்கிறேன்.
ஆனால் சமீப காலமாக பெற்றோர், ஆசிரியர், மாணவர் என்று அனைவருமே ஒரு ஒழுங்கற்ற தன்மையை நோக்கி போய்க்கொண்டு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. (இங்கு நான் அனைவரையும் குறிப்பிடவில்லை.)
இந்த சூழ்நிலையில் ஆசிரியர், மாணவன் உறவை மையமாக வைத்து திருவாரூர் பாபு "கந்தா" படத்தை இயக்கியிருக்கிறார். காமெடிக்கு விவேக் கால்ஷீட் வாங்கியிருக்கிறார்கள். தஞ்சாவூர் பகுதிகளில் பெருமளவு படப்பிடிப்பு நடந்திருக்கிறது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. மணிரத்னம் தயாரித்து அழகம்பெருமாள் இயக்கிய "டும்...டும்...டும்..." படத்தில் தேசிங்கு ராஜா என்ற பாடல் மாதவன்-ஜோதிகா டூயட் தஞ்சை பெரியகோவில், அரண்மனை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டிருந்தது பெரும்பாலானவர்களுக்கு தெரியும்.
இந்தப்படம் நாளை (மார்ச் 23) ரிலீஸ். இப்படத்தின் இயக்குனரை நான் நேரில் பார்த்தது இல்லை என்றாலும் அவரது தந்தை, அண்ணன், தம்பி ஆகியோருடன் எனக்கு ஓரளவு பழக்கம் உண்டு. நானும் அவ்வப்போது சிறுகதை எழுதி வருகிறேன். இந்த ஆர்வம் எனக்குள் சற்று ஆழமாக வேரூன்றியதற்கு திருவாரூர் பாபுவும் ஒரு காரணம்.
1994ஆம் ஆண்டு வாக்கில் ராணி வார இதழில் ஒரு பக்க கதை ஒன்றை படித்தேன். அந்த கதையும் கதையும் தலைப்பும் நினைவில் இல்லை. ஆனால் அதை எழுதிய திருவாரூர் பாபு என்ற பெயர் மட்டும் என் மனதில் நிலைத்து விட்டது. அப்போதே, திருவாரூர் சரவணன் என்ற பெயருடன் கதைகள் பிரசுரமானால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்தேன். அந்த கனவு நனவாகி விட்டது. ஒரு வகையில் நான் எழுத்துப்பணியில் மானசீக குருவாக நினைக்கும் திருவாரூர் பாபுவின் கந்தா திரைப்படம் திருவாரூரில் நடேஷ் தியேட்டரில் ரிலீசாகிறது. அதன் எதிரில் தான் நான் Graphics Design Centre வைத்திருக்கிறேன். இந்த இடுகையில் இணைத்திருக்கும் தியேட்டரின் முகப்பு தோற்றம் என் அலுவலகத்தில் இருந்து எடுத்ததுதான்.
இந்த தியேட்டரை இயக்குனர் ஷங்கர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். (எந்திரன் படம் அந்த தியேட்டரிலும் ரிலீசானது) இப்போதும் அவர்தான் நடத்தி வருகிறாரா என்று தெரியாது. எது எப்படியோ, படம் அனைத்து தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசை.
அனைத்து தரப்பினர் என்று நான் சொல்வது ரசிகர்களையும்தான். காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகர்களும் ஓரளவாவது மன நிறைவு அடையும் வகையில் இருந்தால் படம் வெற்றிதான்.