Search This Blog

வியாழன், 26 ஏப்ரல், 2012

ஊரில் பலர் அறியாத ரகசியம்

ஊரறிந்த ரகசியம் தெரியும். அது என்ன ஊர் அறியாத ரகசியம்?....இது கூட தெரியாதா?. நம்ம அரசியல் வியாதிகள் செய்யுறதுல 99 சதவீதம் இப்படிப்பட்ட வேலைகள்தான். அவங்க பேரைச் சொல்லி அதிகாரிங்க அடிக்கிற கொள்ளையும் இதுலதான் சேரும்.


ஆகஸ்ட் மாத இறுதியில் வேளாங்கண்ணி திருவிழாவுக்காக கிட்டத்தட்ட 15 நாட்கள் நிறைய ஊர்கள்லேர்ந்து சிறப்பு பேருந்துகள் திருவாரூர் வழியா போறதைப் பார்த்திருக்கேன். அது அவசியமும் கூட. அதைத் தவிர்த்துப்பார்த்தா திருவாரூர் தேர்திருவிழா அன்று ஒரு நாள் மட்டும் சில சிறப்புப்பேருந்துகள் வரும். ஆனா சமீப காலமா அப்பப்ப திருவாரூர்ல சிறப்புப்பேருந்துன்னு ஒரு ஸ்டிக்கரோட பாடாவதி பேருந்து நிற்கும். அது ஏன்னு அப்ப எனக்கு புரியலை.

சாதா பேருந்துக்கும் சிறப்புப்பேருந்துக்கும் என்ன வித்தியாசம்னுதானே கேட்டீங்க? சாதா பேருந்துக்கும் எக்ஸ்பிரஸ்னு ஸ்டிக்கர் ஒட்டின பேருந்துக்கும் உள்ள வித்தியாசம்தான். சரி...இப்படி சிறப்பு பேருந்து இயக்கும்போது சினிமா தியேட்டர்ல பிளாக்ல டிக்கட் விக்கிற மாதிரி இருபது, முப்பதுன்னு பிளாட் ரேட்டா டிக்கட் போட்டு வசூலிக்கிறாங்களே. நஷ்டத்துல ஓடுற பஸ்சுக்கு முட்டு குடுக்குறாய்ங்கன்னு பார்த்தா, போக்குவரத்துக்கழக கிளைமேலாளரும், கோட்ட மேலாளரும் சிறப்பு பேருந்து பேரைச் சொல்லி எப்படி கொள்ளை அடிக்கிறாங்கன்னு ஒரு தகவல் கசியுது.

ரெகுலர் டிரிப்பை கேன்சல் செஞ்சுட்டு திடீர்னு ஒரு சிறப்பு டிரிப் அடிச்சா சுமாரா 600 ரூபா டீசலுக்கு எக்ஸ்ட்ரா செலவாகுறதோட, டிரைவர், கண்டக்டர் படிக்காசு தலா 40 ரூபாயாம். இது போகட்டும். அந்த சிறப்பு பேருந்தையும் பகல்ல அவ்வளவா இயக்க மாட்டாங்க. அப்ப எப்போ?  நடுராத்திரி 12 மணியிலேர்ந்து 3 மணி வரைக்கும் அடிச்சா, இந்த சிறப்பு பேருந்து இயக்குறது அந்த வழிகள்ல இருக்குற ஊருக்கு போறவனுக்கே தெரியாதாம். ஆளில்லா கடையில நல்லாவே டீ ஆத்துறாங்கப்பா. உண்மையிலேயே 4 பஸ் வழியுற அளவுக்கு கூட்டம் நிற்கும்போது அந்த வழியில ரெகுலரா போற பஸ்சைக்கூட நிறுத்துற கேவலம் நடக்கும்.

ஊருக்குள்ள எவனுக்கும் தெரியாம சிறப்புப்பேருந்து இயக்குறதுக்கு கோட்ட மேலாளருக்கும், கிளை மேலாளருக்கும் தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாம். ஆனா இந்த மாதிரி டிரிப்புகளில் 200 ரூபா அல்லது 300 ரூபாய்தான் வசூல் ஆகுமாம். அட துரோகிகளா? இப்படி நீங்க கொள்ளை அடிச்சீங்கன்னா பஸ் ரோட்டுல எப்படிடா ஓடும். நஷ்டத்துல ஓடி ஆத்துல...சாரி... அதுல வெறும் பள்ளம் மட்டும்தான் இருக்கு. கடல்ல தான் முழ்கும். இதை எல்லாம் சரி செய்ய முடியாம பஸ் டிக்கட்டை மனசுல 500 கிலோ வெயிட்டோட வேதனையோடதான் ஏத்திருக்கேன்னு அறிக்கை வேற.

ஒரு படத்துல விவேக் பேசும் வசனம். ''ஏண்டா...நீங்க பிச்சைக்காரியை கூட விட்டு வெக்கலியான்னு''. அப்படித்தான் இந்த அரசியல் வியாதிங்க இப்படி போக்குவரத்துக்கழக கிளை மேலாளர், கோட்ட மேலாளர் போஸ்டிங் போடுறதுக்கு எத்தனை லட்சம், எத்தனை கோடி லஞ்சம் வாங்குனானுங்களா? அதை உங்க மூளையை பயன்படுத்தி ஜனங்க .......................குள்ள கையை விட்டு குடைஞ்சு எடுத்து சாப்பிடுங்க அப்படின்னு தண்ணி தெளிச்சு விட்டுருப்பாங்க.

அது சரி...அரசியல் வியாதிங்க சாப்பிடுற டிபனுக்கு பொதுஜனம்தான் பில் மட்டும் இல்லை...டிப்ஸ் கூட கொடுக்கணும்னு தலையெழுத்து.

சிறுதுளி பெருவெள்ளம்னுங்குற கான்செப்டை யார் புரிஞ்சு வெச்சிருக்காங்களா இல்லையோ...இந்த அரசியல் வியாதிங்க நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்காங்கப்பா. இந்தியாவுல இருக்குற 120 கோடி மக்கள் கிட்ட இருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒத்தை ரூபாய உருவுனா கூட 120 கோடியாச்சுன்னு ப்ளான் பண்ணி நம்ம தோலை உரிச்சு தின்னுகிட்டு இருக்காங்க.

இன்னும்தான் இந்த அரசியல் வியாதிங்களை நாமும் நம்பிகிட்டுதானே இருக்கோம்.

புதன், 25 ஏப்ரல், 2012

பயணிகள் கவனிக்கவும்

இரவு உணவின் போது சிறிது நேரம் கேபிள் தொல்லைக்காட்சி பார்க்கும் சூழ்நிலையை என்னால் தவிர்க்க இயலாது. அந்த சில நிமிடங்களில் ஒரு நிறுவனத்தின் விளம்பரம் சற்று கவனிக்க வைத்தது. CEAT டயர் நிறுவனத்தின் விளம்பரம்தான்.



1. நடக்க பழகும் குழந்தையை கவனிக்காமல் இரண்டு பெண்கள் சாலையின் ஓரத்தில் நின்று வம்பு பேசிக்கொண்டிருக்கும்போது அந்தக்குழந்தை சாலையின் நடுவே வந்து டிராபிக் போலீஸ் வேலை பார்க்க முயற்சிக்கும். அப்போது டூவீலர் ஓட்டி வரும் ஒருவர் திடீர் பிரேக் போட்டதும் சட்டென்று வண்டி நின்றுவிடும். அப்போது அந்த குழந்தையின் தாய், டூவீலர் ஓட்டி வந்தவரைப்பார்த்து, இடியட், குழந்தை இருக்குறது தெரியலை...என்று இஷ்டத்துக்கு திட்ட ஆரம்பிப்பார்.

2. கணவனும் மனைவியும் திரைப்படம் பார்த்துவிட்டு டூவீலரில் பேசிக்கொண்டு போவார்கள். இரவு நேரம். டிராபிக் இருக்காது. சிக்னலில் பச்சை விளக்கு எரியும். இவர்கள் அந்த சந்திப்பை கடந்து செல்ல முயற்சிக்கும் போது திடீரென்று குறுக்கே ஒரு கார் பாம்பு மாதிரி இஷ்டத்துக்கு நெளிந்து போகும்.(அப்படிக்கூட சொல்ல முடியாது. இன்னும் கேவலமாக) அப்போது சட்டென்று பிரேக் பிடித்து நிறுத்திய கணவரின் தோளில் கைவைத்து அவரது மனைவி பெருமூச்சு விடுவார் பாருங்கள்...நம் நிஜ வாழ்விலும் இப்படித்தான். ஒழுங்காக ரூல்சை மதிப்பவர்கள் இப்படி செத்துப்பிழைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் விதி மீறும் மதிகெட்ட மாந்தர்கள் உல்லாசமாக இருக்கிறார்கள்.


இன்னும் இரண்டு மூன்று பேட்டர்னில் இந்த விளம்பரம் ஒளிபரப்பானது. அவர்கள் நோக்கம், எங்கள் டயர் எப்படிப்பட்ட சூழலில் பிரேக் பிடித்தாலும் சாலையில் கிரிப்பை விடாது என்று மக்களுக்கு சொல்வது. அவர்கள் சொல்லியிருக்கும் இன்னொரு விஷயம், சாலையில் இப்படி நிறைய இடியட்ஸ் இருக்காங்க என்று நான் சிவப்பு எழுத்துக்களாக காட்டியிருக்கும் நபர்களைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அது உண்மைதான். நான் கல்லூரியில படிக்கும்போது ஒரு பேராசிரியர், உனக்கு ஒரு கேள்விக்கு பதில் தெரியலன்னா என்ன சொல்லுவ? என்றார். எனக்கு தெரியாதுன்னு உண்மையை ஒத்துக்குவேன் என்றேன். அதற்கு அவர், நீ வேஸ்ட். உனக்கு ஒரு கேள்விக்கு பதில் தெரியலன்னா எதிர் கேள்வி கேட்டு அவங்களை குழப்பி விட்டுடணும். இல்லை... வாயை மூட வெச்சுடணும். அப்படின்னு சொன்னார்.

நான் என்ன அரசியல் வியாதியாவா ஆகப்போறேன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டேன். செல்போன் பேசிகிட்டே குழந்தையை கவனிக்காம இருக்குறது மாதிரியான ஆளுங்க, அவங்க தப்பை நீங்க சுட்டிக்காட்டுறதுக்கு முன்னாலேயே  உங்களைத் திட்டி சேப்டியாயிடுவாங்க.

எச்சரிக்கை தேவை நண்பர்களே!

திங்கள், 23 ஏப்ரல், 2012

ஓஹோ ப்ரொடக்சன்ஸ் ஆக ஓடும் ஓ.கே. ஓ.கே


15 ஆண்டுகளுக்கு முன்பு மாப்பிள்ளை கவுண்டர் படத்தில் வடிவேலு, ஒரு லெட்டரைப் பார்த்து பிரபு மற்றும் வினுச்சக்கரவர்த்தியிடம் ''ஒவ்வொரு எழுத்தையும் முத்து முத்தா, அச்சடித்த மாதிரி, கண்ணுல ஒத்திக்கலாம் போல எழுதியிருக்கான்யா...ஆனா என்ன எழுதியிருக்கான்னுதான்யா தெரியல.'' அப்படின்னு சொல்லுவார். அப்படித்தான்யா நானும் ஓ.கே.ஓ.கே படத்துல என்னதான் இருக்குன்னு தேடிப்பார்த்தேன். ஒண்ணுமே தெரியலய்யா...அடுத்தவனை வம்புல மாட்டி விட்டாத்தான் காமெடின்னு சொல்லி படத்தை தேத்திட்டாங்கய்யா.

கோடை விடுமுறை நேரம். இந்த நேரத்துல ரிலீசான மற்ற படங்களும் தேறலை. 3 படம் பட்டை நாமம் போட்டுடுச்சு. பிரண்ட்ஸ், லவ்வர், மனைவி இப்படி யாரோடயாச்சும் போகும்போது சீரியசா ஒரு கதை சொல்லி நெத்தியில ஆணி அடிச்சா படம் கோவிந்தாதான். தமிழன்னு இல்லை. பொதுவாவே எல்லாருக்கும் மத்தவங்களை கலாய்க்குறது ரொம்ப பிடிக்கும். அதை வெச்சு ராஜேஷ் ஹாட்ரிக் அடிச்சுட்டார். பலரும் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தோட அளவுக்கு இதுல விஷயம் இல்லைன்னு சொல்றாங்க. அதுல ஆர்யா பழைய முகம். இதுல உதயநிதி புதுமுகம். ஆகவே இந்த குறைகள் அடுத்தடுத்த படங்கள்ல சரிசெய்யப்படும்னு நம்பலாம்.

திருவாரூரில் ஓ.கே.ஓ.கே படம் ஓடிக்கொண்டிருக்கும் நடேஷ் தியேட்டருக்கு எதிரில்தான் என்னுடைய அலுவலகம் நடத்தி வர்றேன். இந்த பதிவில் இருக்கும் தியேட்டரின் முகப்புத்தோற்றம் இந்த பொங்கல் சமயத்தில் வேட்டை படம் ஓடிக்கொண்டிருக்கும்போது என் அலுவலகத்தில் இருந்து எடுத்தது. 14 வருஷத்துக்கு முன்னால முரளி நடிச்ச பொற்காலம் படம் வரை இந்த தியேட்டர்ல வேலை பார்த்திருக்கேன். பெரும்பாலும் பகுதி நேரப் பணிதான். அந்த காலகட்டத்துல  உள்ளத்தை அள்ளித்தா, நாட்டுப்புறப்பாட்டு, பூவே உனக்காக, காலம் மாறிப்போச்சு, பாஞ்சாலங்குறிச்சி, லவ்டுடே, பொற்காலம் போன்ற படங்கள் இந்த திரையரங்கில் சூப்பர் ஹிட்டாகவும் பரம்பரை, சிவசக்தி, சுபாஷ், கல்கி போன்ற படங்கள் ஆவரேஜாகவும் நடேஷ் தியேட்டரில் ஓடின.

15 ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஹிட் என்று எப்படிப்பட்ட படங்களை சொல்வோம் என்றால், பொற்காலம் சுமார் 80 நாட்கள் ஓடியது. பூவே உனக்காக 50 நாட்களும், நாட்டுப்புறப்பாட்டு, உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்கள் 35 முதல் 40 நாட்களும் ஓடின. சிவசக்தி, சுபாஷ், கல்கி போன்ற படங்கள் மூன்று வாரங்கள் ஓடினாலும் தியேட்டருக்கு லாபம் சம்பாதித்து கொடுத்த படங்களாகவே இருந்தன.

பிறகு நான் படிப்பு, கல்லூரி, வேறு பணி என்று வந்த பிறகு படம் பார்ப்பதில் அவ்வளவாக நாட்டமில்லாமல் போய்விட்டது. தீபாவளி, பொங்கல் போன்ற விசேச தினங்கள் தவிர்த்து ஒரு புதிய முகத்துக்கு (கலைஞர் குடும்பம் என்ற பெயரே சூப்பர் வேல்யூதான் - தியேட்டர் கிடைப்பதற்கு) இவ்வளவு பெரிய ஓப்பனிங் கிடைத்திருப்பது திரைத்துறையிலேயே பலரது காதுவழியாக புகைவரச்செய்திருக்கும்.

ஆளானப்பட்ட விஜய்க்கே வேட்டைக்காரன், சுறா போன்று ஓவர் பில்ட் அப் கொடுத்து மொக்கை போட வைத்து ரசிகர்களுக்கு வெறுப்பேற்றி காலி செய்தது சன் பிக்சர்ஸ். தனுஷ் கூட சுள்ளான் படத்தில் ரசிகர்களை கொலை வெறி ஏற்படச்செய்திருப்பார். ஆனால் அரசியல் வாதி குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதி மிகத் தெளிவாக வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சந்தானத்தையும், திம்சுகட்டையையும் முன்வைத்து எந்த பில்ட்அப்பும் இல்லாமல் படம் கொடுத்து படத்தை ஹிட் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டார்.

கே.எஸ்.ரவிக்குமாரா அல்லது விக்ரமனா என்று தெரியவில்லை. படம் முடிந்து வெளியே வந்த ரசிகன் படத்தைப் பற்றி ஆயிரம் கேள்வி கேட்கலாம். கிண்டல் அடிக்கலாம். ஆனால் படத்தில் முதல் சீனைப் பற்றி இரண்டாவது சீனிலேயே கிண்டல் செய்தால் படத்திற்கு சீன் முடிந்தது என்று சொல்லியிருந்தார். படத்தின் முதல் சீனில் உதயநிதி 10 பேரை பந்தாடினால் நிச்சயம் ரசிகர்கள் வெறுத்துப்போயிருப்பார்கள். (அவருக்கு இருக்கும் அரசியல், பணபலத்திற்கு 100 பேரை கூட பந்தாடலாம். அது வேறு விஷயம்.) ரசிகர்களை தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருக்க வைத்து கதையை காணோம்னு படம் முடிந்து தியேட்டருக்கு வெளியே வந்து கேட்க வெச்சாங்க பாருங்க. அங்கதான் படம் பிழைச்சுடுச்சு. எனக்குத் தெரிஞ்சு நான் பணிபுரிந்த காலகட்டம் தவிர்த்து ரொம்ப நாளைக்கு அப்புறம் தியேட்டர்ல டிக்கட் இல்ல. அப்படின்னு சொல்லி நிறைய பேரை திருப்பி அனுப்புறாங்க.

அதுலயும் வழக்கமா மாலைக்காட்சி ஆறரை மணிக்குதான் போடுவாங்கன்னு நினைச்சு நிறையபேர் ஆறு மணிக்கு வந்தும் டிக்கட் இல்லை. காவலர்களை வைத்து மக்களை திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டது. சில புதுமணத் தம்பதியர் கூட பத்துப் பதினைந்து நிமிடம் வரை தியேட்டர் வாசலை விட்டு கிளம்ப மனமில்லாமல் நின்று கொண்டே இருந்தார்கள். நான் தியேட்டரில் பணிபுரிந்த 1990களின் பிற்பகுதியில் இது மிகவும் சாதாரணம். ஆனால் இப்போது அது எனக்குள் பல கேள்விகளை ஏற்படுத்தியது.

பலருக்கு சினிமா பார்க்க கிளம்பி வந்து விட்டு டிக்கட் இல்லாமல் திரும்பி போவது என்பது கவுரப்பிரச்சனையாகி விடுகிறது என்று நினைக்கிறேன். நானும் அப்படித்தான் இருந்தேன். என்னுடைய பத்து பன்னண்டு வயதில். அப்புறம் பதினாலு பதினஞ்சு வயசுக்கெல்லாம் தியேட்டர்ல வேலைக்கு வந்துட்டேனே. ஆனால் இப்போது படித்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் மனிதர்களும் இப்படி இருப்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. மனித மனம் சில விஷயங்களில் எப்போதும் ஒரு குழந்தைத்தனத்துடன்தான் இருக்கும்போல் இருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் அது வெளிப்படுகிறது. அவ்வளவுதான்.

பாட்டி சொல்லைத் தட்டாதே, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி இது மாதிரி பெயருக்காவது கதையுடன் வந்த (சுட்ட கதையோ, சுடாத கதையோ) முழு நீள காமெடிப்படங்கள் பெரும்பாலும் சோடை போவதில்லை. எஸ்.எம்.எஸ், பாஸ், ஓ.கே.ஓ.கே அப்படின்னு கதை தயார்பண்ற கேப்புல மூணு படம் பண்ணிட்டார் ராஜேஷ். விருந்தும் மருந்தும் 3 நாள் என்பது அனைவருக்கும் தெரியும். ரொம்ப நாளக்கு ஒண்ணுமில்லாத படத்தை ஓஹோன்னு ஓட வைக்க மாட்டாங்க. அதுக்காக படுதோல்வி அடையும்னு சொல்லலை. 10 கோடி லாபம் சம்பாதிச்சு கொடுக்க வேண்டிய படம் 5 கோடியோட நிறுத்திக்கலாம். அதைச் சொன்னேன்.

அப்புறம், எனக்கு தெரிஞ்சு தோற்றத்துல ரொம்ப சுமாரா இருக்குறவங்களாட (விதிவிலக்கும் உண்டு) குணம் பல அழகான பொண்ணுங்களுக்கு இல்லை. அழகான ராட்சசி...இல்ல...இல்ல...அழகான அரக்கியாத்தான் இருக்காங்க. மூஞ்சைப் பார்த்தா வாந்தி வருது. தப்பித்தவறி பார்த்தா அவன் சாக வேண்டியதுதான் இந்த மாதிரி நெகட்டிவ் வசனங்கள் இல்லாம நல்ல காமெடிப்படம் குடுக்க முடியும். அதுக்கு முயற்சி பண்ணுங்க. இப்ப கொஞ்ச நாளாத்தான் மாற்றுத்திறனாளிகள கிண்டல் பண்ணி வர்ற படங்கள் குறைஞ்சுகிட்டு இருக்கு. தெனாவட்டு, காஞ்சனா மாதிரி படங்கள்ல திருநங்கைகளுக்கும் உரிய மரியாதை தர்ற கேரக்டர்களயும் உருவாக்க ஆரம்பிச்சிருக்காங்க.

இந்த படத்துல சொல்ற மாதிரி எல்லாரும் ஹன்சிகா மாதிரியான ஆளுங்கள லவ் பண்றதெல்லாம் முடியுமா? உதயநிதி அப்பா, தாத்தா பெரிய புள்ளிகள். அவர் ஹீரோவாகுறது ரொம்ப சுலபமா நடந்தது மாதிரி படத்துல ஹன்சிகா லவ்வும் ஓகே ஆயிடுச்சு. எல்லாத்துக்கும் மச்சம் வேணும்பா.

என்னென்னமோ சொல்ற...படத்தைப்பத்தியும் ஒண்ணும் சொல்லலை. ஒரு கல் ஒரு கண்ணாடின்னு முழு டைட்டிலையும் சொல்லலைன்னு தானே கேட்குறீங்க. இந்த படத்துல கொஞ்சம் ஓவராவே ஆங்கில வசனம் இருக்கு. அதனால வரிவிலக்கு தர முடியாதுன்னு சொல்லிட்டதா ஏதோ ஒரு பத்திரிகையில படிச்சதா நினைவு. வரிவிலக்குக்கு பயன்படும்னுதான் ஒரு கல், ஒரு கண்ணாடின்னு தலைப்பு வெச்சோம். அதுவே கிடைக்கலைன்னா அந்த கண்ணாடி எதுக்கு அப்படின்னுதான் சும்மா ஓ.கே. ஓ.கேன்னு மட்டும் இந்த பதிவில் எழுதியிருக்கேன்.

சந்திரமுகியில் ரஜினி, சரவணாவில் சிம்பு, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சீடன் படங்களில் தனுஷ் என்று பலரும் இந்த சரவணன் என்ற பெயரில் நடித்து விட்டார்கள். ஏற்கனவே திரைத்துறையில் சரவணன் நடிகர் இருந்ததால் சரவணன் என்ற ஒரிஜினல் பெயரில் இருந்து சூர்யாவாகி விட்டார். (எனக்கு என்னவோ சரவணன்-இந்த பேர் எனக்கு இருக்குறது புடிக்கலை.) ஓகே.ஓகே படத்துல உதயநிதியின் கேரக்டர் பெயர் சரவணன். ரெண்டு தடவை பின்னால போனதும் ஹன்சிகா உதயநிதியை ரசிக்கத்தொடங்கி விட்டதுதான் இந்த படத்தில் ஹீரோயிசம் என்று சொல்லலாம். மற்றபடி என்னை மாதிரி சாதாரண பிரஜையாக இருக்கும் எத்தனையோ சரவணன்களில் ஒருவராகவே உதயநிதி நடித்திருப்பதும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.

நாற்பது பேரை அடிச்சு பந்தாடிட்டு, ரகசியாவோட ஒரு ஓப்பனிங் சாங் இருந்துச்சுன்னா ரிசல்ட் வேற மாதிரி ஆகியிருக்கும்னு ஒருத்தர் சொன்னார். உண்மையாங்க?

ஒரு நேரத்துல நான் கோர்வையா பதிவு எழுதுன மாதிரி இது இருக்குறதா தெரியலை. கதையே இல்லாத கே.ஓகே படம் ஏற்படுத்துன பாதிப்போ?