Search This Blog

சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

ஏன் கலவரம்? - இலக்கியச்சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு

வரும் திங்கள்கிழமை 14.04.2014 திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு இலக்கியச்சிந்தனை அமைப்பின் 44வது ஆண்டு நிறைவு விழா சென்னை-4, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, ஏவி.எம்.இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமுதசுரபி மாத இதழில் வசுமதி ராமசாமி நினைவு முத்திரை சிறுகதையாக நான் எழுதிய தேன்மொழியாள் சிறுகதையை திரு.பாலுமணிவண்ணன் தேர்வு செய்திருந்தார். அருவி என்ற தலைப்பில் அந்த ஆண்டு சிறுகதைத்தொகுப்பு வெளிவந்தது.

அந்த ஆண்டு முதல் எனக்கு இலக்கியச்சிந்தனையிலிருந்து தொடர்ந்து அழைப்பிதழ் வந்துவிடும். பல்வேறு காரணங்களால் என்னால் ஒரு முறை கூட அந்த விழாவிற்கு செல்ல முடிந்ததில்லை. இந்த ஆண்டும் அப்படித்தான் ஆகும் என்று தோன்றுகிறது.

சென்னையில் வசிக்கும், வாய்ப்பு இருக்கக்கூடிய நபர்கள் சென்று வாருங்கள்.

வெகுஜன வார இதழ்களில் வாரம் மூன்று முதல் ஐந்து சிறுகதைகள் ஒரு தொடர்கதை கூட பிரசுரமான காலம் உண்டு. மாதம் ஒரு சிறந்த சிறுகதையை தேர்வு செய்து அதிலிருந்து ஆண்டின் சிறந்த கதை என்று ஒன்றை தேர்வு செய்த காலம் போய் ஒரு ஆண்டில் வெளிவந்த கதைகளில் 12ஐ தேர்வு செய்யும் கதைப்பஞ்ச காலத்தில் இருப்பதாக இலக்கியச்சிந்தனை நிர்வாகிகள் வருத்தப்பட்டதாக எங்கேயோ படித்ததாக நினைவு.

இது உண்மைதான். தொடர்கதைகளின் இடத்தை தொ(ல்)லைக்காட்சிகளின் நெடுந்தொடர்கள் பிடித்துக்கொண்டன என்று கூறலாம். நல்ல எண்ணத்தை விதைத்த வகையில் என்று தவறாக எண்ணிவிட வேண்டாம். புத்தகம் படிக்க செலவழித்த நேரத்தை களவாடி சகிப்புத்தன்மையை அழித்து பிஞ்சு முதல் பெரியவர்கள் வரை அவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் காரியம்தான் 99.9 சதவீதம் நடந்து வருகிறது.

கற்றலின் கேட்டல் நன்று என்று கூறியிருப்பது தொ(ல்)லைக்காட்சிகளின் நெடுந்தொடர்களுக்கு பொருந்தாது என்பது என் மனதில் தோன்றிய கருத்து. நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் வரை (2003) வரை எங்கள் வீட்டில் தொ(ல்)லைக்காட்சி கிடையாது. சிறு வயதில் இருந்து பாடப்புத்தகத்தை காட்டிலும் கதைப்புத்தகங்கள் படித்ததுதான் அதிகம். ஆனாலும் நூலகம் அறிமுகமானது 1999 டிசம்பரில்தான். அப்போது முதல் 2003ல் கல்லூரிப்படிப்பு முடிக்கும் வரை நான் வாசித்த புத்தகங்கள் ஏராளம். அதிலும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் 5 பாகத்தையும் ஒரு வார காலத்துக்குள் வாசித்து முடித்தேன். அது சுகானுபவம்.

அந்த 4 ஆண்டுகளை ஒப்பிட்டால் அதன் பிறகு இந்த 11 ஆண்டில் நான் வாசித்தவை குறைவுதான். அதற்கு காரணம் வேலைப்பளு என்பதைக் காட்டிலும் 200 சதுரடி கொண்ட ஒற்றை அறையை மட்டுமே கொண்டது எங்கள் வீடு என்பதால் புத்தகம் படிக்க இடம் என்பது கிடைக்காமல் போய்விட்டது.

இதெல்லாம் சும்மா... மனசு வைத்தால் மலையைப் புரட்டி விடலாம் என்று கூறும் நண்பர்களுக்கு சில விஷயங்களைக்கூற விரும்புகிறேன். மன உறுதி பற்றி பேசுபவர்கள் எல்லாம் கையில் ஒரு புத்தகத்துடன் தொ(ல்)லைக்காட்சியில் நிகழ்ச்சியின் ஒளி, ஒலியை வைத்துக்கொண்டு அமர்ந்து படியுங்கள். அப்போது தெரிந்து விடும் உங்கள் மன உறுதி. (இதைத் தாண்டிய சத்தத்திலும் மனதை ஒருமுகப்படுத்துவது சிலருக்கு சாத்தியமாகலாம். பெரும்பாலானோருக்கு அதற்கு வாய்ப்பே இல்லை. அவர்களில் நானும் இருக்கிறேன்.

வீட்டை விட்டு வெளியில் வந்து அமர்ந்து படிக்க வேண்டியதுதானே என்று கேட்பீர்கள். கொசுக்களுக்கு பதில் சொல்ல என் உடலில் வலு இல்லை.

பவர் கட், வேறு ஏரியாவில் பவர் கட்டாகி எங்கள் வீட்டில் கேபிள் டி.வி தெரியாத நிலை என்றால் நிம்மதியாக படிப்பேன். (அந்த நேரத்தில் அம்மா, தாத்தாவுக்கு எதையாவது படித்துக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்து எரிச்சல் வருவது வேறு விஷயம்.)

படிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித சங்கடங்கள் இருந்தாலும் ஜோதிடம், ஆன்மீகம், பணம் சம்பாதிப்பது எப்படி? ஒரே வாரத்தில் சுவிஸ் பாங்கில் அக்கவுண்ட் ஓப்பன் செய்யும் அளவுக்கு கொள்ளையடிப்பது ... சாரி... சம்பாதிப்பது எப்படி என்பது போன்ற புத்தகங்கள்தான் அதிக அளவில் விற்பனையாவதாக சில புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வாசிப்பு அனுபவம் இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கும் காலத்திலும், இதழ்களில் சிறுகதைகள் பிரசுரமாவது அபூர்வமாகிவிட்ட நேரத்திலும் 44 ஆண்டுகளாக இலக்கியச்சிந்தனையின் பணி தொடர்ந்து கொண்டு இருப்பது பாராட்டத்தக்கது.

இந்த பணி தொடர பல்வேறு நபர்களும் பல விதத்தில் உதவி வருகிறார்கள். அவர்களுக்கு வாசகர் சார்பில் நன்றி.

கல்கி வார இதழில் சிறுகதைப்போட்டி அறிவிக்கப்பட்டுவிட்டது. அடுத்து தினமணி கதிர் - நெய்வேலி புத்தகக்கண்காட்சி சிறுகதைப்போட்டி, தினமலர் வாரமலர் போட்டி என்று வரும் மூன்று நான்கு மாதங்களும் சிறுகதைகளுக்கான போட்டிகள் நடைபெறும். கடைசியாக நான் 2010 ஆண்டு கலந்து கொண்டு ஒரு போட்டியில் 5ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு வாங்கியதுடன் சரி. சொந்த தொழில் செய்ய தொடங்கியதில் இருந்து உருப்படியாக எதையும் எழுதவில்லை. இந்த ஆண்டாவது சோம்பேறித்தனத்தை விட்டு எதையாவது எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன்.

இலக்கியச்சிந்தனை சார்பில் 2013ம் ஆண்டின் சிறந்த சிறுகதையென கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி தேர்ந்தெடுத்த பி.சுந்தரராஜன் எழுதிய தினமணி கதிர் 04-08-2013 இதழில் வெளியான ‘ஏன் கலவரம்?’ என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கதை பிரசுரமானபோதே படித்திருப்பேன். தினமணி இணையதளத்தில் இப்போது காணக்கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

புதன், 12 ஜூன், 2013

12-06-2013 குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புதினம்

இது குறித்து நான் எழுதிய கதைக்கு 2500 ரூபாய் பரிசு கிடைத்தது. ராணி வார இதழும், தமிழக அரசின் குழந்தைத்தொழிலாளர் மறுவாழ்வு மையமும் இணைந்து நடத்திய சிறுகதைப்போட்டியில் 2006 ஆம் ஆண்டு மே மாத தலைப்பு - குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பில் பெற்றோர் பங்கு.

அதற்கு நான் எழுதி அனுப்பிய சிறுகதை 2006 மே மாதத்துக்குரியதாக தேர்வு பெற்று செப்டம்பர் மாதம் பிரசுரமானது. இதை எழுதிய நானும் குழந்தை தொழிலாளியாக இருந்தவனே. ஆனால் யார் செய்த புண்ணியமோ படிப்பு நடுவில் ஒரு முறை தடைபட்டாலும் கல்லூரி வரை சென்று படிக்க முடிந்தது. ஆனால் பள்ளிப்பக்கமே செல்ல முடியாமல் இன்றும் எண்ணிக்கைக்குள் கொண்டுவர முடியாத அளவில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

இதற்கு முக்கிய முதல் காரணம், பெற்றோர்தான். அடுத்ததாக கொடுத்தவனே பறித்துக்கொண்டானே என்ற வார்த்தைகளுக்கேற்ப நடந்து கொண்டு ................ கடை நடத்தி .................. பானம் மூலம் யார் ஏழைகளின் பணத்தை பிடுங்கிக்கொள்கிறார்கள் என்று பப்ளிக்காக சொன்னால் ஆட்டோ வரலாம். அல்லது வழக்கு பாயலாம்.

பெற்றோரை முக்கிய காரணம் என்று நான் சொல்லக்காரணம், வருமானம் இல்லை என்ற வாதம் ஒரு வகையில் சரி என்றாலும், இன்னொரு பக்கம் ஸ்கில்டு லேபர் பற்றாக்குறை நான் பார்த்த வரை மிக அதிகமாகவே இருக்கிறது. கட்டிடத்தொழிலாளி, வெல்டர், தச்சுவேலை, மின்சாரப்பணியாளர், பிளம்பர் என்று பல வேலைகளிலும் இருக்கும் ஆட்களில் வேலைத்திறன் மிக்கவர் மிக குறைவே. மற்றபடி இந்த வேலை பார்ப்பவர்கள் மனதில் இந்த தொழில் மீது உண்மையான ஆர்வத்துடன் செயல்பட்டால் சாப்ட்வேர் எஞ்ஜீனியருக்கு சற்றும் குறைவில்லாமல் சம்பாதிக்கலாம்.

ஏற்கனவே இதை விட பலமடங்கு சம்பாதிப்பவர்களும் உரிய வழிகாட்டுதல், ஆலோசனை இல்லாததால் சேமிக்க வாய்ப்பு இல்லாமலும், முறையற்ற செலவுகள் செய்பவர்களுமாக இருக்கின்றனர். கல்வியின்மைதான் இதற்கு காரணம் என்று சொல்ல முடியும். கல்வி என்றால் பாடப்புத்தகத்தை மட்டும் சொல்லவில்லை. அது ஒரு பகுதிதான். மற்ற நூல்கள் வாசிப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. பள்ளிகளில் நீதிக்கதைகள் வகுப்பும் விளையாட்டு வகுப்பும் கிட்டத்தட்ட இல்லவே இல்லை.

விளைவு - சுய நலத்தின் மறு வடிவமாக இன்றைய தலைமுறை மாறிக்கொண்டிருக்கிறது. அடுத்தவங்களுக்காக ஐயோ பாவம் என்று நான் கவலைப்பட்டால் அப்படியா என்று கேட்டுவிட்டு இன்னும் எனக்கு நஷ்டம் ஏற்படுத்தும் ஆட்களைத்தான் நான் அதிகம் சந்திக்கிறேன். அதனால் நானும் இப்போது என்னை கண்ணாடி போல் மாற்றிக்கொள்ள வேண்டியதாகி விட்டது. உனக்கு வந்தா ரத்தம். எனக்கு வந்தா அது தக்காளி சட்னியா என்று வடிவேலு ஒரு படத்தில் கேட்பது போல் சுய நல குணம் கொண்டவர்களைத்தான் நான் அதிகம் சந்திப்பதால் பல சமயங்களில் விரக்தியாக உணர்கிறேன். ஆனால் இப்போது ஒரு தெளிவு வந்துவிட்டது. கடமையை செய், பலனை எதிர்பாராதே என்று செயல்படுவது எந்த இடத்தில் சாத்தியமோ, நமக்கு வருமானம் வராவிட்டாலும் நஷ்டம் ஏற்படுத்தாதோ...அந்த இடத்தில் மட்டுமே அப்படி நடந்து கொள்ள ஆரம்பித்துவிட்டேன். மற்றபடி தன் காசு என்று கறாராக இருக்கும் நபர்களிடம் என் காசு என்று நானும் எனக்கு வரவேண்டிய பண விஷயத்தில் கவனமாக வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

சில கஷ்டமர்கள் என்னிடம் வந்து செல்லும்போது "கடைசியில் என்னையும் இப்படி ஆக்கிட்டாங்களே" என்று சினிமாவசனம் அடிக்கடி எப்போதாவது என் மைண்ட் வாய்சில் கேட்கும்.

-----------------------------------

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.,), எந்த வயதில் வேலைபார்க்க வேண்டும் என்பதை வரையறுத்துள்ளது. அதன்படி, கடினமான வேலைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கட்டாயமாக கல்வி கற்க வேண்டும். 13 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், லேசான வேலை பார்க்கலாம் (அவர்களது கல்வி, சுகாதாரம், மனம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல்).

- இந்த தகவல் ஒரு இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் நிஜத்தில் இப்படியா நடக்கிறது.

-----------------------------------

சின்ன புள்ளைங்க விஷயத்தை விட்டுடுவோம். நான் கல்லூரி முடித்து 8 வருஷத்துல பல இடத்துல வேலை பார்த்துட்டேன். அவனுங்க குடுக்குறதா சொன்ன காசை விட அதிகமாவே கூவிருக்கேன்.(ஐ மீன் உழைத்திருக்கிறேன்) இதை வெளி பார்ட்டிகிட்ட அந்த முதலாளி (அ) மேனேஜரே சொல்லியிருக்காங்க. ஆனா எனக்கு பேசுன சம்பளம் ஒரு இடத்துலேயும் ஒழுங்கா வந்தது இல்லை.(தனியா ஒயரிங் வேலை பார்க்க போனப்பவும் இப்படித்தான் நடந்தது.)

ஆனால் இப்போ நான் (அ) நண்பர்கள் எங்களுக்கு ஆக வேண்டியதுக்கு நியாயமான அளவு சம்பளத்தை விட அதிகமா கொடுக்க தயாரா இருந்தும் ஆளுங்க 500 ரூபா வாங்குனா 200 ரூபாய்க்குதான் வேலை செய்யுறாங்க. ஆனா என் ராசிக்கு 500 ரூபாய்க்கு வேலை செய்தா மொத்தமே 50 ரூபாய்தான் கிடைக்கும். அதுவும் 5 இண்டால்மெண்ட்டுல.

அது சரி, வேலை பார்க்காம சம்பளம் வாங்குறதுக்கும், தனக்காக அடுத்தவன் உழைச்சு சம்பாதிச்சு தர்றதுக்கும் ஜாதகத்துல ஒரு அமைப்பு வேணும் போலிருக்கு.

---------------------------------
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 1
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 2
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 3
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 4

திங்கள், 8 ஏப்ரல், 2013

அருங்காட்சியத்திற்கு போகும் சிறுகதைகள்

கல்கி வார இதழில் வழக்கம்போல் இந்த ஆண்டும் சிறுகதைப்போட்டி அறிவித்திருக்கிறார்கள். முதல் பரிசு 10ஆயிரம், இரண்டாம் பரிசு 7 ஆயிரத்து 500, மூன்றாம்பரிசு 5000. இது தவிர பிரசுரமாகும் கதைகளுக்கு 500 ரூபாய் சன்மானம் தருவார்கள் என்று நினைக்கிறேன். அறிமுக எழுத்தாளர் என்றால் சிறப்பு பரிசு உண்டு.

கதைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜுன் 15. ரெகுலராக வாசிப்பில் இருப்பவர்களுக்கு இந்த விவரங்கள் நன்கு தெரியும். இந்த பதிவில் நான் குறிப்பிட்டிருப்பது புதியவர்களுக்காக.

நானும் கடந்த 2000வது ஆண்டில் இருந்து தொடர்ந்து சிறுகதைகளை இந்த போட்டிக்கு எழுதி அனுப்பிக்கொண்டேதான் இருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட பிரசுரத்துக்கு கூட தேர்வு பெற்றது இல்லை. இரண்டு முறை வாசகர் கடிதம் வந்துள்ளது. பிறகு 2011ல் கல்கி தீபாவளி தமாக்கா போட்டியில் கட்டுரை ஒன்றிற்கு சைக்கிள் பரிசு கிடைத்தது. இந்த ஆண்டும் சிறுகதை பரிசுக்கு முயற்சிக்க வேண்டும். கல்கி போட்டியில் தேர்வாகாத சிறுகதைகளை மீண்டும் பிற இதழ்களுக்கு அனுப்பி அவை அனைத்துமே பிரசுரமாகியிருக்கின்றன. எங்கே சறுக்குகிறேன் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

------------------
தமிழ் இதழ்களில் பிரசுரமாகும் சிறுகதைகளில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறந்த சிறுகதையை தேர்வு செய்து அந்த ஆண்டின் 12 சிறுகதைகளில் ஒரு சிறந்த சிறுகதையை தேர்வு செய்து நூலாக வெளியிடும் பணியை 43ஆண்டுகளாக இலக்கியச்சிந்தனை செய்துவருகிறது. நான் எழுதிய தேன்மொழியாள் என்ற சிறுகதை அமுதசுரபியில் வசுமதி ராமசாமி அறக்கட்டளை பரிசு பெற்று அது 2006ஆம் ஆண்டு ஜனவரி மாத சிறந்த சிறுகதையாகவும் தேர்வு பெற்றது.

தேன்மொழியாள் - அமுதசுரபி இதழ் - பக்கம் 1
தேன்மொழியாள் - அமுதசுரபி இதழ் - பக்கம் 2
தேன்மொழியாள் - அமுதசுரபி இதழ் - பக்கம் 3
தேன்மொழியாள் - அமுதசுரபி இதழ் - பக்கம் 4

அந்த கதை இடம்பெற்ற தொகுப்பு பெயர் அருவி. அதில் உள்ள பிற 11 எழுத்தாளர்களை தொடர்புகொள்ள முயற்சித்தேன். 5 பேர் மட்டும் தொடர்பில் வந்தார்கள். அவர்களில் ஒருவர் மட்டும் தொடர்ந்து பல மாதங்கள் தொலைபேசி தொடர்பில் இருந்தார். அவர் பெயர் எம்.ஆர்.ராஜேந்திரன். இவர் கொற்றவன் என்ற பெயரில் கதை, கவிதை, கட்டுரை எழுதியதுடன் கல்கியில் நிருபராகவும் பணியாற்றினார். இப்போது ஒரு மினிபட்ஜெட் படம் இயக்கியுள்ளதாக கல்கியில் ஒரு பக்க செய்தி வெளியாகியுள்ளது. இவருடைய அலைபேசி எண்ணும் என்னுடைய மொபைல்போன் மாற்ற அலைக்கழிப்பில் எங்கே சென்றது என்று தெரியவில்லை.

இலக்கியச்சிந்தனைக்கு ஒவ்வொரு மாதமும் வந்து குவியும் சிறுகதைகளில் சிறந்ததை தேர்ந்தெடுப்பதே கடினமாக இருக்கும். ஆனால் இப்போது ஒரு ஆண்டு முழுவதும் வரும் சிறுகதைகளில் வெகு சுலபமாக சும்மா பேருக்கு 12 கதைகளை தேர்ந்தெடுத்துவிடலாம் போலிருக்கிறது. அந்த அளவு வெகுஜன இதழ்கள் சிறுகதைகளை குறைத்துவிட்டன. அல்லது ஏறக்குறைய சிறுகதை பிரசுரத்தையே நிறுத்திவிட்டன என்று சொல்லலாம். அப்படி ஒன்றிரண்டு சிறுகதைகளும் பிரபல எழுத்தாளர்களுடையது மட்டுமே பிரசுரமாகின்றன என்று இலக்கியசிந்தனை நிர்வாகி ஒருவர் வருத்தப்பட்டிருந்தார்.

இலக்கியசிந்தனை பற்றிய வலைத்தள சுட்டி

இதழ்கள் அனைத்திலும் சினிமா மட்டுமே பெருமளவு ஆதிக்கம் செலுத்துகின்றன. அப்படி ஒருசில புதியவர்கள் எழுதினாலும் ஒரு பக்க கதை, அரைபக்க கதை என்று நசுக்கப்பட்டுவிட்டார்கள். இவர்கள் இப்படி பிரசுரம் செய்வதால் மக்களின் ரசனையும் குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப்பட்டு எங்கும், எதிலும் பொறுமை, சகிப்புத்தன்மை இல்லாமல் அவசரப்படுகிறார்கள். (ஒரு பிரபல இதழில் அதன் துணையாசிரியர்களே உப்புசப்பில்லாத ஒருபக்க கதைகளை எழுதி சன்மானத்தை அவர்களே எடுத்துக்கொள்ளும் கேவலமான நிலையும் இருப்பதாக சிலர் சொல்லக்கேள்வி. அதை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் சுமார் துணுக்கு மற்றும் ஜோக்குகள், கடிதங்கள் பிரசுரமான வகையில் எனக்கு 2006-07 ஆம் ஆண்டில் மட்டும் 5ஆயிரம் ரூபாய் வரை பணத்தை அனுப்பாமல் மோசடி செய்துவிட்டார்கள். நானும் கடிதம் எழுதி அலுத்துப்போய் விட்டுவிட்டேன். இப்போது அந்த இதழுக்கு நான் எதையுமே எழுதி அனுப்புவதில்லை.)

இந்த ஆண்டு இலக்கியச்சிந்தனை 43ஆம் ஆண்டு நிறைவு விழா வரும் வெள்ளிக்கிழமை 12-04-2013 மாலை 6 மணிக்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலை ஏவி.எம்.இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் எனக்கும் வந்திருக்கிறது. 2006ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வருகிறது. ஆனால் பொருளாதார காரணங்களால் என்னால் கலந்து கொள்ள முடிவதில்லை.

நான் பரிசு பெற்ற ஆண்டில் அந்த விழா நடைபெறும் முதல் நாள் வரை சென்னையில்தான் இருந்தேன். முதல் நாள் இரவு புறப்பட்டு மறுநாள் காலை திருவாரூர் வந்துவிட்டேன். அன்று மாலை 4 மணிக்கு என்னிடம் போஸ்ட் மேன் விழாவிற்கான அழைப்பிதழை கொடுத்தார். பிரித்துப்பார்த்தால் 6 மணிக்கு விழா. நாம என்ன யஹலிகாப்டர்லயா போகமுடியும்னு நினைச்சு விட்டுட்டேன். அதன்பிறகு போகும் வாய்ப்பே அமையவில்லை.

2012ஆம் ஆண்டின் சிறந்த நாவலாக கவிப்பேரரசு திரு. வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற நாவலைப் பாராட்டி ரூ.5000 பரிசை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வழங்க உள்ளதாக அழைப்பிதழில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

காவிரிப் பாசன மாவட்டங்களில் வேளாண்மை வெறுமையானதால் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயிகளின் 11 குடும்பங்களுக்கு இந்த நாவல் ஈட்டிய வருவாயிலிருந்து தலா 1 லட்சம் வீதம் 11 லட்சத்தை பரிவுத்தொகையாக வைரமுத்து வழங்க இருப்பதாகவும் அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஆனந்த விகடன் 04.04.2012 இதழில் வெளியான ஒற்றைச்சிறகு சிறுகதைக்கு ஆயிரம் ரூபாய் பரிசு.

சென்னையில் இருப்பவர்கள் வாய்ப்பிருந்தால் போய்வாருங்கள்.

போகிற போக்கில் சிறுகதைகள் என்ற வடிவம் வெகுவிரைவில் நூலகத்தில் கூட கிடைக்காமல் அருங்காட்சியத்தில் போய் பார்க்க வேண்டிய நிலை வரலாம்.

வியாழன், 14 பிப்ரவரி, 2013

காதல்

திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம் பதிப்பு தினமலர் - வாரமலர் டி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு ரூ.5,000/= பெற்ற சிறுகதை.

தஞ்சாவூரில் உள்ள ஒரு மருந்து விநியோகநிறுவனத்தில் வேலைசெய்வதால் என்னுடைய முக்கியப்பணியே ஊரில் உள்ள அனைத்து மருந்து கடைகளுக்கும் சென்று ஆர்டர் எடுப்பதுதான்.

அன்று வழக்கம்போல் நான் அந்த மருந்துக்கடைக்குச் சென்றபோது வாசுதேவன் என்னைப்பார்த்து புன்னகைத்துவிட்டுக் கிளம்பினார்.

“என்ன இந்த ஆளு...ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கடையில மருந்து வாங்கிட்டு திரியிறாரு? எல்லா கடையிலயும் கடன் சொல்லிட்டுப் போறாரோ?” என்று நான் சாதாரணமாகத்தான் கேட்டேன்.

“டேய் ராமமூர்த்தி...உடம்பு வலியால ராத்திரிஎல்லாம் தூங்கமுடியலை.நாங்க வலிதாங்காம கத்திகிட்டு இருக்குறதால மத்தவங்களுக்கும் தூக்கம் கெடுது.என்னால அடிக்கடி கடைக்கு வந்து மாத்திரை வாங்க முடியாது.அதனால  பத்து மாத்திரை சேர்த்துக் குடு தம்பின்னு கேட்டாரு.நானும் நம்பிட்டேன்.

ஆனா இவரு ஊர்ல இருக்குற கடை எல்லாத்துலயும் ஏறி இறங்குறாருன்னு நீ சொல்றதைப் பார்த்தா, தற்கொலை செஞ்சுக்க ஏற்பாடு பண்ணிகிட்டு இருக்குற மாதிரியில்ல தெரியுது.உனக்குத் தெரிஞ்ச ஆளா இருந்தா ஏதாவது புத்திமதி சொல்லி அந்த மாத்திரைகளைப் பிடுங்கி வீசுற வழியைப் பாரு.

இது பாட்டுக்கு நிம்மதியா போய் சேர்ந்துடும்.என் கெட்ட நேரம் அங்க தொட்டு இங்க தொட்டு விசாரணைன்னு போலீஸ் இங்க வந்ததுன்னு வையி...நான் மாமூல் கொடுத்தே கடையை மூடிட வேண்டியதுதான்.” என்று குமார் அலறாத குறையாக பதறினான்.

குமாருடைய பேச்சு எப்போதுமே விளையாட்டாகத்தான் இருக்கும். ஆனால் இப்படி படபடப்புடன் தகவல் சொன்னால் அது உடனடியாக கவனிக்க வேண்டிய விஷ­யம்தான்.

நேற்றுதான் அவரை, பெரியகோயிலுக்கு அருகில் இருந்த மெடிக்கலில் பார்த்தேன்.

“பிரதோ­ஷத்துக்காக வந்தேன்.அப்படியே மருந்தையும் வாங்கிட்டுப்போயிடலாம்னு...” என்று சிரித்துவிட்டுச் சென்றார்.

அந்தக் கடை முதலாளி,“அவரு உனக்கும் பழக்கமா?...மன நிம்மதிக்காக பிரதோ­ஷ தரிசனம், நிம்மதியான தூக்கத்துக்காக மாத்திரை கொள்முதல்... வயசாயிட்டாலே இதெல்லாம் சகஜமோ...” என்று சொல்லிவிட்டு அவருடைய வேலையைக் கவனித்தார்.

அப்போது இதை நானும் பெரிய வி­ஷயமாக எடுத்துக் கொள்ள வில்லை. இன்று குமாருடைய மெடிக்கலிலும் அவர் தூக்க மாத்திரைகளை வாங்கிச்சென்றதை அறிந்ததும் என் மனதுக்குள் சந்தேகம் அழுத்தமானது.

****

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு தஞ்சாவூரில் ஒரு வீட்டுத் திண்ணையில் தொடங்கப் பட்டதுதான் வாசுதேவன் மெஸ். சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய தஞ்சை நகர மக்கள் வாசுதேவன்,அவர் மனைவி பத்மா இருவரது கைப்பக்குவத்தில் உருவான உணவின் ருசியையும் அனுபவித்து மகிழ்ந்தார்கள்.

தஞ்சாவூருக்குச் சென்ற யாருக்கும் வாசுதேவன் மெஸ் பற்றி தெரியாமல் இருக்காது என்ற அளவில் புகழ்பெற்று பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.

தஞ்சைக்குப் பெருமை சேர்த்த ராஜராஜனின் பிறந்த தினமான சதய நட்சத்திர நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படாத காலத்தில் கூட வாசுதேவன் தன்னுடைய  உணவு விடுதியில் அன்னதானம் செய்வார்.பலரது பசியையும் போக்கி வயிறுடன் மனதையும் நிறையச்செய்த வாசுதேவனைப் பற்றி தஞ்சை நகரத்தில் பேசாதவர் இல்லை.

என்னுடைய தாத்தா முதல் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் வரை வாசுதேவனின் குணத்தைப் பற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள். தான தர்மம் செய்வதைக்காட்டிலும் தொழிலில் அவர் காட்டும் ஈடுபாடுதான் அனைவரையும் அதிகஅளவில் பிரமிப்பில் ஆழ்த்தி யிருப்பதாக எனக்குத் தோன்றியது.

எங்கள் கல்லூரிப் பேராசிரியரின் தங்கைக்குத் திருமணம்.இரண்டாயிரம் பேர் வருவார்கள் என்று கணக்கிட்டு மதிய உணவு தயாரித்திருக்கிறார்கள்.ஆனால் முகூர்த்த நேரம் நெருங்கியபோதே கூடியிருந்தவர்கள் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்து விட்டது.

மகளைத் தாரைவார்த்துக்கொடுக்க தயாராகிக்கொண்டிருந்த பேராசிரியரின் தந்தை செல்வகணபதியிடம் சென்ற வாசுதேவன், “அய்யா...எப்படியும் ரெண்டாயிரம்பேர் கூடுதலா வர வாய்ப்பு இருக்கு.” என்று சொன்னதும் செல்வகணபதியின் முகம் இருண்டிருக்கிறது.

“அய்யா...உங்களைப் பயமுறுத்துறதுக்காக இதை நான் சொல்லலை.யாரும் சாப்பிடுறதுக்கு முன்னால கிளம்பாம பார்த்துக்குங்க.முதல் பந்தியில இருக்குற எல்லா வகை பதார்த்தமும் கடைசி பந்தி வரை இருக்குற மாதிரி கூடுதலா தயார் செய்யுறது என் பொறுப்பு.

இலை எண்ணிக்கையை கவனிச்சுக்குறதுக்கு உங்க சார்பா யாரையாச்சும் அனுப்பி வையுங்க.உங்க சொந்தக்காரங்களுக்கு நம்பிக்கை வரணும் இல்லையா...” என்ற வாசுதேவன் கிடுகிடுவென சமையல்கூடத்துக்குச் சென்றுவிட்டாராம்.

கூடுதல் சமையலுக்கு பெண்வீட்டிலிருந்து பணம் கிடைக்குமா கிடைக்காதா என்றெல்லாம் அவர் யோசித்துக்கொண்டிருக்கவில்லை.அவருடைய ஒரே நோக்கம், அந்த திருமணத்திற்கு வந்தவர்கள்  சாப்பிடாமல் செல்லக்கூடாது. அடுத்தடுத்த பந்திகளில் சாப்பிட அமர்ந்தவர்கள் முதல் பந்தியில் இருந்த பல பதார்த்தங்களைக் காணவில்லை என்றும் சொல்லக்கூடாது.அவ்வளவுதான்.

இந்த ஒரு வி­ஷயத்துலேர்ந்து அவர் மேல எனக்கு அவ்வளவு மரியாதை.என்று எங்கள் பேராசிரியர் சொன்னபோது எங்கள் அனைவருக்கும் வியப்பாகத்தான் இருந்தது.

இப்படி ஊருக்கே பசியாற்றியவர் சரியான உணவு கிடைக்காமல் மெலிந்துகொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரிந்ததும் முதலில் அய்யோ...பாவம் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் நிலைமை தூக்க மாத்திரை அளவில் வந்திருப்பது தெரிந்ததும் என்னால் வேலையில் கவனம் வைக்கமுடியவில்லை.

பொதுவாக வயதாகிவிட்டால் வீட்டில் சும்மா இருக்க முடியாமல் எதையாவது சொல்லி திட்டிக்கொண்டே இருப்பதும் அவர்களின் வாரிசுகள் பதிலுக்கு இவர்களைத் திட்டுவதும் பெரும்பாலான  இடங்களில் நடக்கும் விஷ­யம்தான் என்பதால் இதைப் பற்றி யோசிக்கவில்லை.

வாசுதேவனின் மகள் திருமணமாகி கோயம்புத்தூரில் இருக்கிறார்.

அவர் அழைத்ததற்கு,“இரண்டு மகன்கள் இருக்கும்போது மகள் வீட்டில் சென்று செத்தால் பிள்ளைகளின் கவுரவம் போய்விடும். அதனால் எங்களுக்கு எது நடந்தாலும் இங்கேயே நடக்கவேண்டும்.” என்று வாசுதேவனும் அவர் மனைவியும் உறுதியாக இருந்தார்கள்.

இதைக் கேட்டதும் உங்களைத் திருத்தவும் முடியாது.நீங்க அவதிப்பட்டு சாகுறதைத் தடுக்க ஆண்டவனாலயும் முடியாது"ன்னு நானே நினைச்சிருக்கேன்.

வாசுதேவன் வீடு இருந்த தெருவுலேயே நாங்களும் கடந்த ரெண்டு வரு­மா குடியிருக்கோம்.அதனால என் அம்மா மூலமா தெரிஞ்ச தகவல்கள்தான் இவை.

இவ்வளவு சம்பாதித்து மகன்களை நல்ல நிலையில் வைத்த வாசுதேவன் இப்படி சாப்பாட்டுக்கு வழியில்லாம அவதிப்படுறதுக்கு அவரும் அவர் மனைவியும் வாய்த்துடுக்கா பேசுறதுதானே காரணமா இருக்க முடியும்னு என் மனசுக்குத் தோணுச்சு. அதை வெளிக்காட்டிக்காம,இவ்வளவு தூக்க மாத்திரை எதுக்குங்க என்று கேட்டேன்.

எனக்கு எல்லா வி­ஷயமும் தெரிந்து விட்டது என்பதை உணர்ந்த அவர் தன் மனதில் இருந்த ஆதங்கத்தைக் கொட்டினார்.

“தம்பி...இப்போ நீ மூவாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு எவ்வளவு கஷ்டப்படுறன்னு உனக்கு நல்லாவே தெரியும்.இந்த வேலையில நீ  எவ்வளவுதான் சிரமப்பட்டாலும் சம்பளம் நிச்சயமா கிடைச்சிடும். ஆனா நான் மெஸ் ஆரம்பிச்ச காலத்துல இதை விட கடுமையா உழைக்க வேண்டியிருந்தது.ஆனா இலாபம்னுங்குறது நிச்சயமில்லை.அதுதான் சொந்த தொழிலுக்கும் வேற வேலைக்குப் போறதுக்கும் உள்ள வித்தியாசம்.இந்த ஆபத்தை உணர்ந்து எதிர்நீச்சல் போட்டதாலதான் நான் நேசிச்ச ஹோட்டல் தொழில் எங்களுக்கு படிப்படியா வருமானத்தை அள்ளிக்கொடுத்தது.

இந்தப் பணத்தை என் மகன்கள் அவங்க வசதிக்கு பயன்படுத்திக்கிறாங்க.அது கூட பரவாயில்லை.ஆனா நான் உழைச்ச காலத்துல வருமானத்துல ஒரு பகுதியை மற்றவங்களுக்கு உதவி செய்யுறதுக்காக ஒதுக்கி செலவழிச்சேன்.இவங்க அதை செய்யுறது இல்லை.ஆனா என்னோட மருமகளுங்க அவங்க பிறந்த வீட்டினருக்கு கணக்குவழக்கில்லாம செலவழிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

முடியாதவங்ளோட கல்வி, மருத்துவ செலவுகளுக்குப் பணம் கொடுக்குறது வேற.அதே சமயம், நம்ம பிள்ளைகளுக்கோ, உறவினர்களுக்கோ இஷ்டத்துக்கு அள்ளிக்கொடுத்து சோம்பேறியாக்குறது எனக்கும் பத்மாவுக்கும் சுத்தமா பிடிக்காது.

நாம கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி சேர்த்த பணம் இப்படி வீணாகுதேன்னு ஆதங்கத்தை நான் மனசுக்குள்ளேயே பூட்டி வெச்சிட்டேன்.ஆனா என் மனைவியால முடியலை.அவ கோபப்பட்டு பேசுறது என் மருமகளுங்களுக்கு புடிக்கலை.

பெருசுங்களுக்கு சாப்பாட்டுல ஒண்ணும் இல்லாம ஆக்கிட்டா சீக்கிரம் போய் சேர்ந்துடுவாங்க. நாம இஷ்டப்படி செலவழிக்கலாம்னு நினைச்சுட்டாங்க. அவ்வளவுதான்.

இந்த ஜென்மத்துல ஹோட்டல் வெச்சு, முடியாதவங்க பலருக்கும் உணவு கொடுக்க வெச்ச கடவுள், இப்போ எங்களை அவதிப்பட வெச்சிருக்கான்னா அதுக்கு பூர்வ ஜென்மத்துல நாங்க செய்த பாவம்தான் காரணமா இருக்கும்.அதனால சரியான சாப்பாடு கிடைக்காதது கூட எனக்கு வருத்தமில்லை.

என் மனைவிக்கு காது மந்தமாயிடுச்சு. அதனால மருமகளுங்க இஷ்டத்துக்கு அவளைத்திட்டுற வார்த்தைகள் என் காதுல ஈட்டியை வெச்சு குத்துறமாதிரி இருக்கு. அதைத்தான் என்னால தாங்கமுடியலை.இப்படி அசிங்கப்படுறதுக்கு பதில் அவ போயிட்டான்னா மருமகளுங்க செலவழிக்கிறதை தப்பு சொல்ல யாரு இருக்கா?

அவங்களுக்கும் சந்தோஷ­ம். பத்மாவுக்கும் நிம்மதி. நான் என்ன சொல்லப்போறேன்.அவங்க போடுறதை தின்னுட்டு ஒரு மூலையில முடங்கிக் கிடப்பேன்.

ஆனா ஒரு விஷ­யம் தம்பி...நல்லதோ கெட்டதோ, நாளைக்கு உங்க அம்மா அப்பாவை ஓரம்கட்டிடாதீங்க.

அதாவது,சின்னதோ பெரிசோ அவங்களுக்குன்னு ஏதாவது ஒரு பொறுப்பையோ வேலையையோ கொடுங்க.இத்தனை வரு­மா ஓடி ஓடி உழைச்சு புள்ளைங்ளைக் காப்பாத்துனோம்.இப்ப நாம ஓரமா இவங்களுக்கு பாரமா இருக்கோமோ...அப்படின்னு பெரியவங்களுக்கு வர்ற சிந்தனைதான் பல குடும்பங்கள்ல உறவுச் சிக்கலுக்கு காரணமாயிடுது.

என் மனைவி பேர்லயும் தப்பு இருக்கு ஒத்துக்குறேன்.அன்பு இருக்குற இடத்துல சகிப்புத்தன்மைக்கு வேலையில்லை.ஆனா அன்பு, பாசம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை இதெல்லாம் இருவழிப்பாதையா இருக்கணும்.பல குடும்பங்கள்ல இதெல்லாம் ஒருவழிப்பாதையாயிடுச்சு.அதோட விளைவுகள்தான், இவ்வளவு முதியோர் இல்லங்களும், குடும்பநல நீதிமன்றங்களும், சமீப காலமா பிள்ளை என்னைக் கவனிக்கலைன்னு பெத்தவங்க கொடுக்குற புகார்களும்.” என்று சொன்ன வாசுதேவனின் முகத்தைப் பார்த்தேன்.

தூக்கிய சுமையை நெடுநேரம் கழித்து இறக்கிவைத்தவர் போல் அவருடைய முகம் தெளிவாக இருந்தது.

இவரைப்பொறுத்தவரை மனதில் உள்ள கவலைகளை நியாயமான முறையில் பேசினார்.இதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்க ஆட்கள் இருந்தாலே, இவரைப்போன்ற முதியவர்கள் மனதில் சலனமில்லாமல் இருப்பார்கள் என்று  எனக்குத் தோன்றியது.

“நீங்க சொன்னதெல்லாம் சரிதான் அய்யா...ஆனா மரணத்தை முடிவுசெய்யுறது கடவுள்தான்.பல பேரோட பசியைப்போக்கிய எனக்கு சரியான சாப்பாடு இல்லை. அது போன ஜென்மத்துல செய்த பாவமாத்தான் இருக்கும்னு நீங்களே சொல்லிட்டீங்க.இப்போ உங்க மனைவியை உலகத்தை விட்டு அனுப்பி ஏன் இன்னும் பாவத்தை சுமக்க நினைக்குறீங்க?

இந்த ஜென்மத்துல நீங்க செய்த புண்ணியங்கள் மட்டுமே உங்க கணக்குல இருக்கட்டுமே.தயவு செய்து அந்த மாத்திரைகளைக் கொடுங்க.” என்று நான் கேட்டதும் அவர் கண்களில் கண்ணீர்.ஆனால் முகத்தில் பிரகாசம்.

“என்னை மாதிரி வயசானவங்க பேச ஆரம்பிச்சாலே கிழம் அறுக்க ஆரம்பிச்சிடுச்சுன்னு ஒதுங்கிப் போறவங்கதான் அதிகம்.ஆனா நீ ரொம்ப பேசலைன்னாலும் சொன்ன சில வார்த்தைகள் என் மனசுக்கு ஆறுதலா இருக்கு. நம்ம ஆயுளைத் தீர்மானிக்கிற உரிமையையே பகவான் நமக்குத் தரலை. அடுத்தவங்களுடைய வாழ்நாளைப் பற்றி முடிவுசெய்ய நான் யாரு?...பெரிய பாவம் செய்ய இருந்த எனக்கு நல்ல வழி காட்டிட்ட தம்பி. வீட்டுல இருக்குற மாத்திரைகளைத் தூக்கிப்போட்டுடுறேன். ” என்ற அவர் தன் கையில் இருந்த மாத்திரைகளை என்னிடம் தந்தார்.

“ஆனா ஒண்ணு தம்பி...என் மருமகளுங்க அவ்வளவு அசிங்கமான வார்த்தைகளால என் மனைவியைத் திட்டுறாங்க.இதையயல்லாம் வாங்கிகிட்டு அவ இருக்குறதைவிட போய்ச் சேருறது மேல்னு நினைச்சுதான் தூக்கமாத்திரைகளைக் கொடுக்க முடிவு செஞ்சேன்.” என்று மீண்டும் கண்கலங்கினார்.

அடுத்த சில நாட்களில் வாசுதேவனின் மனைவி பத்மா, கீழே விழுந்ததில் நினைவிழந்து விட்டார்.இரண்டு நாட்கள் அதே நிலையில் இருந்து அவருடைய உயிர் பிரிந்தது.

நான் வாசுதேவனின் வீட்டுக்குச் சென்றபோது அவருடைய மருமகள்கள், அவர்களுடைய உறவுக்கார பெண்களைக் கட்டிக்கொண்டு, “ஆயுசுக்கும் இவங்களுக்கு சேவை செய்யணும்னு நினைச்சோமே...இப்படி எங்களை அநாதையா தவிக்கவிட்டுட்டு போயிட்டாங்களே...” என்று அழுதார்கள்.

எனக்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டேன். அதுவரை பேசாமல் இருந்த வாசுதேவன் என் கைகளைப் பிடித்துக்கொண்டு,“தம்பி...என் மனசு சஞ்சலப்பட்டது அவளுக்கு எப்படியோ தெரிஞ்சுடுச்சு...அதான் உங்களுக்கு எந்த பாவமும் வேண்டாம்...நானே போயிடுறேன்னு அவ வாழ்க்கையை முடிச்சுட்டு போயிட்டா...இனிமே எனக்கு யாரு இருக்கா...நான் அனாதையா நிக்கிறேனே...” என்று கதறியவரைத் தேற்ற எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

5 ஆயிரம் ரூபாய் பரிசு வாங்கித் தந்த காதல்

கடந்த 14.11.2012 அன்று காரைக்காலில் கயவனால் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட வினோதினி இன்று 12-2-2013 உயிரிழந்தார். அந்த குற்றவாளிக்கு என்ன பெரிய தண்டனை கிடைத்துவிடப்போகிறது?

(இது சற்றே பெரிய பதிவு)

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு (வருடம் சரியாக தெரியவில்லை) மும்பையில் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய பெண்ணை ஒரு கயவன் கற்பழித்து கொடூரமாக தாக்கியதில் இன்றுவரை அவர் கண்விழிக்கவில்லை. மருத்துவமனை நிர்வாகம்தான் பராமரித்து வருகிறது, அந்த பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் நீதிமன்றம் அளித்த சிறைத்தண்டனையை மட்டும் (அதுவும் முழு காலமும் சிறையில் இருந்தானா என்று தெரியாது) அனுபவித்துவிட்டு வெளி உலகில் மனைவி, குழந்தைகள் என்று சுதந்திரமாக வாழ்கிறானாம் என்ற செய்தியை முன்பு ஒரு முறை பத்திரிகையில் படித்ததாக நினைவு.

இப்போது வினோதினி மீது ஆசிட் வீசியவனுக்கும் பெரிய தண்டனை எதுவும் கிடைக்குமா என்று தெரியவில்லை. அழகான பெண்ணின் பின்னால் தொடர்ந்து அலைந்து கொண்டு அதை காதல் என்று பிதற்றிக்கொண்டிருக்கும் மிருகங்கள்தான் ஆசிட்வீச்சு போன்ற கொடூரமான காரியங்களில் ஈடுபடுகின்றன.

ஏதாவது ஒரு விசயத்தில் நியாயம் கேட்கும் சாமானியனுக்கு பதில் சொல்ல திராணியில்லாத அதிகார எந்திரம் அந்த அப்பாவியை ஓட ஓட விரட்டுவதற்காக மட்டுமே முழுவீச்சில் கையில் எடுக்கும் ஆயுதமாகத்தான் பெரும்பாலும் சட்டங்கள் இருக்கின்றன. இதை இல்லை என்று மறுக்க முடியுமா?

ஏதோ ஒரு ஊரில் மதுபானக்கடை அருகில் குடித்துவிட்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்களை விட்டுவிட்டு போக்குவரத்துக்கு கொஞ்சமும் இடையூறு இல்லாத பகுதியில் பூரி, வடை சாப்பிடுபவர்களை கூட்டம் போடக்கூடாது என்று ...........னர் வந்து விரட்டுவதாக ஏதோ ஒரு பதிவில் படித்தேன். இப்படித்தான் சாதாரண மனிதர்களின் குரல்வளையை முழு அளவில் நெறிக்கும் சட்டம் உண்மையான சமூக விரோதிகளுக்கு கையை அழுத்திப்பிடிக்கும் அளவில் மட்டுமே பல நேரங்களில் அமைந்துவிடுகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு பதினோறாம் வகுப்பு படித்த ஒருவர் வகுப்பில் கவலையுடன் இருக்கும்போது நகைச்சுவை உணர்வு மிக்க ஆசிரியர் ஒருவர், என்ன தம்பி, காதலி பிச்சுகிட்டு போயிட்டாளா? தவற விட்ட பொண்ணைப்பத்தியும், தவறவிட்ட பேருந்தைப் பத்தியும் கவலைப்படக்கூடாது. அடுத்த பொண்ணு, அடுத்த பஸ்சு...அவ்வளவுதான். பள்ளிக்கூட படிப்பு முடிக்கவே இன்னும் ஒன்றரை வருசம் இருக்கு. அப்புறம் மூணு இல்ல நாலு வருசம் கல்லூரி. அப்புறம் வேலை அல்லது தொழில். அடுத்து வாழ்க்கையில பயமில்லாம பயணிக்க நிரந்தர வருமானம். அதுக்கப்புறம் காதல் என்றால் (ஏற்கனவே காதலித்திருந்தால் பெற்றோர் சம்மதம் பெறுவதற்கு இந்த காலகட்டத்தில் முயற்சித்தால்) பெரும்பாலும் பிரச்சனையில்லை. என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் சொற்பொழிவில் சொன்னதாக முன்பு ஒரு பத்திரிகையில் படித்ததை நினைவுகூர்கிறேன்.

"கணவன் மனைவிக்குள் பெரும்பாலும் உரசல்கள், பிரச்சனைகள் வருவதற்கு 90 சதவீதம் பணம்தான் காரணமாக அமைகிறது. அதை நேர்த்தியாக சமாளிக்கும் குடும்பங்களில் மீதம் இருக்கும் பிரச்சனைகள் தாமாகவே வெயில் கண்ட பனித்துளி போல மறைய வாய்ப்பு அதிகம்.''

இதைத்தான் இன்றைய காதலர்களிடம் (அல்லது) காதலிப்பதாக நினைப்பவர்களுக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.

பெண்கள் மீதான வன்முறை மட்டுமல்ல...சக மனிதனின் மீது வன்முறையை பிரயோகிக்கும் ரவுடிகள் அல்லது அரைவேக்காட்டு மனிதர்களின் மனநிலையில் இருந்து கொடூர எண்ணங்களை வேரோடு அழிப்பதற்கு அல்லது ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதில் தூங்கிக்கொண்டிருக்கும் மிருகம் எந்த காலத்திலும் எழுந்துவிடாமல் இருக்கச் செய்வது சாதாரண விசயம் இல்லை. இந்த நெறிப்படுத்துதல் சிறுபிராயத்திலிருந்தே துவங்கப்படவேண்டும்.

என்னுடைய சிறுவயதில் கதைப்புத்தகங்கள் அதிகமாக படித்திருக்கிறேன். அவற்றின் மையக்கருத்து தப்பு செய்தால் எப்படியும் மாட்டிக்கொள்வோம் என்று முடிவைத்தரும் வகையில்தான் அமைந்திருக்கும். தப்பு செய்ய நான் பயந்து ஒழுங்காக இருப்பதற்கு இந்த மாதிரியான கதைகள் படித்ததும் முக்கிய காரணமாக இருக்கலாம். ராஜேஷ்குமார் நாவல்கள் மீதும் பலருக்கும் முரண்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அந்த விமர்சனங்களைத் தாண்டி அவருடைய கதைகளில் உள்ள ஒரு அம்சம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதாவது நான் படித்தவரையில் அவரது எல்லா நாவல்களிலுமே வில்லன்கள் ரொம்பவும் புத்திசாலித்தனத்துடன் தப்பு செய்வார்கள். ஆனால் ஏதோ ஒரு தடயம் காரணமாக கண்டிப்பாக போலீசிடம் மாட்டிக்கொள்வார்கள். இந்த மாதிரி தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற உறுதியான நிலைப்பாடு நம்நாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு.

குற்றம் செய்தால் தப்பிக்க முடியாது என்ற உறுதியான நிலை ஏற்படுவது ஒருபுறம் அவசியமான தேவை. அதேபோல் எந்த தப்பு செய்தாலும் ஏதாவது ஒரு கேடுகெட்ட அரசியல் வியாதி அல்லது தாதா துணை இருந்தால் போலீசில் இருந்து தப்பிவிடலாம் என்ற வகையில் சினிமா, சீரியல் போன்றவற்றில் காட்சி அமைப்புகள் வைக்கப்பட்டு அதுதான் வளரும் தலைமுறை மீதும், பெற்றோர்கள் மனதிலும் திணிக்கப்படுகிறது. மதுபானக்கடைகளுக்கு வருடத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் விடுமுறைகளும், நூலகங்களுக்கு மாதத்தில் குறைந்தது 6 நாட்கள் முதல் 13 நாட்கள் வரை விடுமுறை இருப்பதிலேயே நாம் வாழும் சூழ்நிலையின் அவலநிலையை தெரிந்துகொள்ளலாம்.

---------------------

2010 ஆம் ஆண்டு பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றின் திருச்சி பதிப்பு தலைமை அலுவலகத்தில் ஒரு வாரம் பக்கம் வடிவமைக்க பயிற்சி பெற்றுவிட்டு திருவாரூர் கிளை அலுவலகத்தில் பணியில் சேர்ந்தேன். இரண்டு நாட்களுக்குள் அந்த நாளிதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் நான் எழுதி அனுப்பிய கதை 5 ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு பெற்ற தகவல் அறிந்து எனக்கு பெரிய அளவில் உற்சாகம் இல்லை. 50 ஆயிரம் ரூபாய் கடன் இருக்கும் போது இந்த 5ஆயிரம் ரூபாயை வெச்சு என்ன செய்யுறது என்று கவலைப்பட்ட ஆள் நான்.

அன்று இருந்த மனநிலையைப் பற்றி இப்போது யோசித்துப்பார்க்கும்போது, நான் இப்படி பல தருணங்களில் நிகழ்கால சந்தோசத்தை அனுபவிக்காமல் எதிர்காலம் அல்லது கடந்த காலத்தை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன் என்பது புரிகிறது.

அது தவிர அந்த சிறுகதை என்னுடைய புகைப்படத்துடன் பிரசுரமானதால் திருவாரூரில் பலரும் என்னிடம் வந்து, கதை சூப்பர். தொடர்ந்து எழுதுங்க என்றார்கள். என்னிடம் பேசாமல் இருந்த உறவுக்காரர் ஒருவர் கூட திருமண விழா ஒன்றில் என்னை சந்தித்து, தம்பி...காதல் ‡ கதை சூப்பர் என்று சொன்னார்.

அந்த கதை பிரசுரமான நேரத்தில் இரண்டு மாதங்கள் பலரும் என்னை அடையாளம் கண்டு பேசியதை மிகவும் கூச்சமாக உணர்ந்தேன். பள்ளி, கல்லூரியில் கடைசி வரிசையில் வாத்தியார் கண்ணில் படாமல் அமர்ந்தவன் நான். இப்போதும் சில கோவில்கள், சுபநிகழ்ச்சிகளில் முன்னின்று சில உதவிகள் செய்தாலும் என் மீது வெளிச்சம் படுவதை மனம் விரும்புவதில்லை. அது தவிர நான் எழுதி அனுப்பும் கதை, கட்டுரை போன்றவற்றை புனைப்பெயர் குறிப்பிட்டு அனுப்பினாலும் பல நேரங்களில் இயற்பெயருடனேயே பிரசுரம் செய்துவிடுகிறார்கள். அது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. இதனாலேயே அதிகம் எழுதுவதில்லை. தவறான விசயங்கள் எதுவும் எழுதுவதில்லை. பெரும்பாலும் நான் எழுதுபவை கருத்து கந்தசாமி வகையிலேயேத்தான் இருக்கும். அது சரி... உன்னை யாரு நாட்டைப்பத்தி கவலைப்பட்டு எழுத சொன்னது என்று கேட்பது புரிகிறது. என்னதான் இருந்தாலும் என் எழுத்துப்பாதையை மாற்றிக்கொள்ள மனம் விரும்புவதில்லை.

5 ஆயிரம் ரூபாய் பரிசுபெற்ற காதல் என்ற சிறுகதையை இத்துடன் பதிவேற்றியிருக்கிறேன். கதையை புத்தகப்பக்கம் போல் வடிவமைக்க நான் முயற்சி செய்த PDF File-ஐ பதிவிறக்கம் பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
***********************************************

பழைய பதிவில் கதைக்காக நான் எழுதிய முன்னோட்டம்.

இப்போது பலரும் தன் பிள்ளைகள் கொடுமைப்படுத்தி சாப்பாடு போட மறுக்கிறார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கச்செல்கின்றனர். இந்த சூழ்நிலைக்கு சம்பந்தப் பட்ட பெற்றோர்களே பல நேரங்களில் தங்களின் துன்பத்திற்கு காரணமாகின்றனர் என்று என் மனதில் தோன்றிய கருத்தை வைத்து எழுதிய சிறுகதை.

சுயநலமே உலகம் என்று ஆகிவிட்ட நிலையில் தனக்கு மிஞ்சிதான் தான தர்மம் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பது அவசியமே என்பது என்னுடைய கருத்து. தன்னுடைய பிள்ளைகளாக இருந்தாலுமே!

*********************************************

காதல்-சிறுகதை.

தஞ்சாவூரில் உள்ள ஒரு மருந்து விநியோகநிறுவனத்தில் வேலைசெய்வதால் என்னுடைய முக்கியப்பணியே ஊரில் உள்ள அனைத்து மருந்து கடைகளுக்கும் சென்று ஆர்டர் எடுப்பதுதான்.
அன்று வழக்கம்போல் நான் அந்த மருந்துக்கடைக்குச் சென்றபோது வாசுதேவன் என்னைப்பார்த்து புன்னகைத்துவிட்டுக் கிளம்பினார்.

“என்ன இந்த ஆளு...ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கடையில மருந்து வாங்கிட்டு திரியிறாரு? எல்லா கடையிலயும் கடன் சொல்லிட்டுப் போறாரோ?” என்று நான் சாதாரணமாகத்தான் கேட்டேன்.

“டேய் ராமமூர்த்தி...உடம்பு வலியால ராத்திரிஎல்லாம் தூங்கமுடியலை.நாங்க வலிதாங்காம கத்திகிட்டு இருக்குறதால மத்தவங்களுக்கும் தூக்கம் கெடுது.என்னால அடிக்கடி கடைக்கு வந்து மாத்திரை வாங்க முடியாது.அதனால  பத்து மாத்திரை சேர்த்துக் குடு தம்பின்னு கேட்டாரு.நானும் நம்பிட்டேன்.
ஆனா இவரு ஊர்ல இருக்குற கடை எல்லாத்துலயும் ஏறி இறங்குறாருன்னு நீ சொல்றதைப் பார்த்தா, தற்கொலை செஞ்சுக்க ஏற்பாடு பண்ணிகிட்டு இருக்குற மாதிரியில்ல தெரியுது.உனக்குத் தெரிஞ்ச ஆளா இருந்தா ஏதாவது புத்திமதி சொல்லி அந்த மாத்திரைகளைப் பிடுங்கி வீசுற வழியைப் பாரு.
இது பாட்டுக்கு நிம்மதியா போய் சேர்ந்துடும்.என் கெட்ட நேரம் அங்க தொட்டு இங்க தொட்டு விசாரணைன்னு போலீஸ் இங்க வந்ததுன்னு வையி...நான் மாமூல் கொடுத்தே கடையை மூடிட வேண்டியதுதான்.” என்று குமார் அலறாத குறையாக பதறினான்.

குமாருடைய பேச்சு எப்போதுமே விளையாட்டாகத்தான் இருக்கும். ஆனால் இப்படி படபடப்புடன் தகவல் சொன்னால் அது உடனடியாக கவனிக்க வேண்டிய விஷ­யம்தான்.
நேற்றுதான் அவரை, பெரியகோயிலுக்கு அருகில் இருந்த மெடிக்கலில் பார்த்தேன்.
“பிரதோ­ஷத்துக்காக வந்தேன்.அப்படியே மருந்தையும் வாங்கிட்டுப்போயிடலாம்னு...” என்று சிரித்துவிட்டுச் சென்றார்.

அந்தக் கடை முதலாளி,“அவரு உனக்கும் பழக்கமா?...மன நிம்மதிக்காக பிரதோ­ஷ தரிசனம், நிம்மதியான தூக்கத்துக்காக மாத்திரை கொள்முதல்... வயசாயிட்டாலே இதெல்லாம் சகஜமோ...” என்று சொல்லிவிட்டு அவருடைய வேலையைக் கவனித்தார்.

அப்போது இதை நானும் பெரிய வி­ஷயமாக எடுத்துக் கொள்ள வில்லை. இன்று குமாருடைய மெடிக்கலிலும் அவர் தூக்க மாத்திரைகளை வாங்கிச்சென்றதை அறிந்ததும் என் மனதுக்குள் சந்தேகம் அழுத்தமானது.

****

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு தஞ்சாவூரில் ஒரு வீட்டுத் திண்ணையில் தொடங்கப் பட்டதுதான் வாசுதேவன் மெஸ். சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய தஞ்சை நகர மக்கள் வாசுதேவன்,அவர் மனைவி பத்மா இருவரது கைப்பக்குவத்தில் உருவான உணவின் ருசியையும் அனுபவித்து மகிழ்ந்தார்கள்.

தஞ்சாவூருக்குச் சென்ற யாருக்கும் வாசுதேவன் மெஸ் பற்றி தெரியாமல் இருக்காது என்ற அளவில் புகழ்பெற்று பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.

தஞ்சைக்குப் பெருமை சேர்த்த ராஜராஜனின் பிறந்த தினமான சதய நட்சத்திர நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படாத காலத்தில் கூட வாசுதேவன் தன்னுடைய  உணவு விடுதியில் அன்னதானம் செய்வார்.பலரது பசியையும் போக்கி வயிறுடன் மனதையும் நிறையச்செய்த வாசுதேவனைப் பற்றி தஞ்சை நகரத்தில் பேசாதவர் இல்லை.

என்னுடைய தாத்தா முதல் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் வரை வாசுதேவனின் குணத்தைப் பற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள். தான தர்மம் செய்வதைக்காட்டிலும் தொழிலில் அவர் காட்டும் ஈடுபாடுதான் அனைவரையும் அதிகஅளவில் பிரமிப்பில் ஆழ்த்தி யிருப்பதாக எனக்குத் தோன்றியது.

எங்கள் கல்லூரிப் பேராசிரியரின் தங்கைக்குத் திருமணம்.இரண்டாயிரம் பேர் வருவார்கள் என்று கணக்கிட்டு மதிய உணவு தயாரித்திருக்கிறார்கள்.ஆனால் முகூர்த்த நேரம் நெருங்கியபோதே கூடியிருந்தவர்கள் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்து விட்டது.

மகளைத் தாரைவார்த்துக்கொடுக்க தயாராகிக்கொண்டிருந்த பேராசிரியரின் தந்தை செல்வகணபதியிடம் சென்ற வாசுதேவன், “அய்யா...எப்படியும் ரெண்டாயிரம்பேர் கூடுதலா வர வாய்ப்பு இருக்கு.” என்று சொன்னதும் செல்வகணபதியின் முகம் இருண்டிருக்கிறது.

“அய்யா...உங்களைப் பயமுறுத்துறதுக்காக இதை நான் சொல்லலை.யாரும் சாப்பிடுறதுக்கு முன்னால கிளம்பாம பார்த்துக்குங்க.முதல் பந்தியில இருக்குற எல்லா வகை பதார்த்தமும் கடைசி பந்தி வரை இருக்குற மாதிரி கூடுதலா தயார் செய்யுறது என் பொறுப்பு.

இலை எண்ணிக்கையை கவனிச்சுக்குறதுக்கு உங்க சார்பா யாரையாச்சும் அனுப்பி வையுங்க.உங்க சொந்தக்காரங்களுக்கு நம்பிக்கை வரணும் இல்லையா...” என்ற வாசுதேவன் கிடுகிடுவென சமையல்கூடத்துக்குச் சென்றுவிட்டாராம்.

கூடுதல் சமையலுக்கு பெண்வீட்டிலிருந்து பணம் கிடைக்குமா கிடைக்காதா என்றெல்லாம் அவர் யோசித்துக்கொண்டிருக்கவில்லை.அவருடைய ஒரே நோக்கம், அந்த திருமணத்திற்கு வந்தவர்கள்  சாப்பிடாமல் செல்லக்கூடாது. அடுத்தடுத்த பந்திகளில் சாப்பிட அமர்ந்தவர்கள் முதல் பந்தியில் இருந்த பல பதார்த்தங்களைக் காணவில்லை என்றும் சொல்லக்கூடாது.அவ்வளவுதான்.

இந்த ஒரு வி­ஷயத்துலேர்ந்து அவர் மேல எனக்கு அவ்வளவு மரியாதை.என்று எங்கள் பேராசிரியர் சொன்னபோது எங்கள் அனைவருக்கும் வியப்பாகத்தான் இருந்தது.

இப்படி ஊருக்கே பசியாற்றியவர் சரியான உணவு கிடைக்காமல் மெலிந்துகொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரிந்ததும் முதலில் அய்யோ...பாவம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் நிலைமை தூக்க மாத்திரை அளவில் வந்திருப்பது தெரிந்ததும் என்னால் வேலையில் கவனம் வைக்கமுடியவில்லை.

பொதுவாக வயதாகிவிட்டால் வீட்டில் சும்மா இருக்க முடியாமல் எதையாவது சொல்லி திட்டிக்கொண்டே இருப்பதும் அவர்களின் வாரிசுகள் பதிலுக்கு இவர்களைத் திட்டுவதும் பெரும்பாலான  இடங்களில் நடக்கும் விஷ­யம்தான் என்பதால் இதைப் பற்றி யோசிக்கவில்லை.

வாசுதேவனின் மகள் திருமணமாகி கோயம்புத்தூரில் இருக்கிறார்.

அவர் அழைத்ததற்கு,“இரண்டு மகன்கள் இருக்கும்போது மகள் வீட்டில் சென்று செத்தால் பிள்ளைகளின் கவுரவம் போய்விடும். அதனால் எங்களுக்கு எது நடந்தாலும் இங்கேயே நடக்கவேண்டும்.” என்று வாசுதேவனும் அவர் மனைவியும் உறுதியாக இருந்தார்கள்.

இதைக் கேட்டதும் உங்களைத் திருத்தவும் முடியாது.நீங்க அவதிப்பட்டு சாகுறதைத் தடுக்க ஆண்டவனாலயும் முடியாது"ன்னு நானே நினைச்சிருக்கேன்.

வாசுதேவன் வீடு இருந்த தெருவுலேயே நாங்களும் கடந்த ரெண்டு வரு­மா குடியிருக்கோம்.அதனால என் அம்மா மூலமா தெரிஞ்ச தகவல்கள்தான் இவை.

இவ்வளவு சம்பாதித்து மகன்களை நல்ல நிலையில் வைத்த வாசுதேவன் இப்படி சாப்பாட்டுக்கு வழியில்லாம அவதிப்படுறதுக்கு அவரும் அவர் மனைவியும் வாய்த்துடுக்கா பேசுறதுதானே காரணமா இருக்க முடியும்னு என் மனசுக்குத் தோணுச்சு. அதை வெளிக்காட்டிக்காம,இவ்வளவு தூக்க மாத்திரை எதுக்குங்க என்று கேட்டேன்.

எனக்கு எல்லா வி­ஷயமும் தெரிந்து விட்டது என்பதை உணர்ந்த அவர் தன் மனதில் இருந்த ஆதங்கத்தைக் கொட்டினார்.

“தம்பி...இப்போ நீ மூவாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு எவ்வளவு கஷ்டப்படுறன்னு உனக்கு நல்லாவே தெரியும்.இந்த வேலையில நீ  எவ்வளவுதான் சிரமப்பட்டாலும் சம்பளம் நிச்சயமா கிடைச்சிடும். ஆனா நான் மெஸ் ஆரம்பிச்ச காலத்துல இதை விட கடுமையா உழைக்க வேண்டியிருந்தது.ஆனா இலாபம்னுங்குறது நிச்சயமில்லை.அதுதான் சொந்த தொழிலுக்கும் வேற வேலைக்குப் போறதுக்கும் உள்ள வித்தியாசம்.இந்த ஆபத்தை உணர்ந்து எதிர்நீச்சல் போட்டதாலதான் நான் நேசிச்ச ஹோட்டல் தொழில் எங்களுக்கு படிப்படியா வருமானத்தை அள்ளிக்கொடுத்தது.

இந்தப் பணத்தை என் மகன்கள் அவங்க வசதிக்கு பயன்படுத்திக்கிறாங்க.அது கூட பரவாயில்லை.ஆனா நான் உழைச்ச காலத்துல வருமானத்துல ஒரு பகுதியை மற்றவங்களுக்கு உதவி செய்யுறதுக்காக ஒதுக்கி செலவழிச்சேன்.இவங்க அதை செய்யுறது இல்லை.ஆனா என்னோட மருமகளுங்க அவங்க பிறந்த வீட்டினருக்கு கணக்குவழக்கில்லாம செலவழிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

முடியாதவங்ளோட கல்வி, மருத்துவ செலவுகளுக்குப் பணம் கொடுக்குறது வேற.அதே சமயம், நம்ம பிள்ளைகளுக்கோ, உறவினர்களுக்கோ இஷ்டத்துக்கு அள்ளிக்கொடுத்து சோம்பேறியாக்குறது எனக்கும் பத்மாவுக்கும் சுத்தமா பிடிக்காது.

நாம கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி சேர்த்த பணம் இப்படி வீணாகுதேன்னு ஆதங்கத்தை நான் மனசுக்குள்ளேயே பூட்டி வெச்சிட்டேன்.ஆனா என் மனைவியால முடியலை.அவ கோபப்பட்டு பேசுறது என் மருமகளுங்களுக்கு புடிக்கலை.

பெருசுங்களுக்கு சாப்பாட்டுல ஒண்ணும் இல்லாம ஆக்கிட்டா சீக்கிரம் போய் சேர்ந்துடுவாங்க. நாம இஷ்டப்படி செலவழிக்கலாம்னு நினைச்சுட்டாங்க. அவ்வளவுதான்.

இந்த ஜென்மத்துல ஹோட்டல் வெச்சு, முடியாதவங்க பலருக்கும் உணவு கொடுக்க வெச்ச கடவுள், இப்போ எங்களை அவதிப்பட வெச்சிருக்கான்னா அதுக்கு பூர்வ ஜென்மத்துல நாங்க செய்த பாவம்தான் காரணமா இருக்கும்.அதனால சரியான சாப்பாடு கிடைக்காதது கூட எனக்கு வருத்தமில்லை.
என் மனைவிக்கு காது மந்தமாயிடுச்சு. அதனால மருமகளுங்க இஷ்டத்துக்கு அவளைத்திட்டுற வார்த்தைகள் என் காதுல ஈட்டியை வெச்சு குத்துறமாதிரி இருக்கு. அதைத்தான் என்னால தாங்கமுடியலை.இப்படி அசிங்கப்படுறதுக்கு பதில் அவ போயிட்டான்னா மருமகளுங்க செலவழிக்கிறதை தப்பு சொல்ல யாரு இருக்கா?

அவங்களுக்கும் சந்தோஷ­ம். பத்மாவுக்கும் நிம்மதி. நான் என்ன சொல்லப்போறேன்.அவங்க போடுறதை தின்னுட்டு ஒரு மூலையில முடங்கிக் கிடப்பேன்.
ஆனா ஒரு விஷ­யம் தம்பி...நல்லதோ கெட்டதோ, நாளைக்கு உங்க அம்மா அப்பாவை ஓரம்கட்டிடாதீங்க.

அதாவது,சின்னதோ பெரிசோ அவங்களுக்குன்னு ஏதாவது ஒரு பொறுப்பையோ வேலையையோ கொடுங்க.இத்தனை வரு­மா ஓடி ஓடி உழைச்சு புள்ளைங்ளைக் காப்பாத்துனோம்.இப்ப நாம ஓரமா இவங்களுக்கு பாரமா இருக்கோமோ...அப்படின்னு பெரியவங்களுக்கு வர்ற சிந்தனைதான் பல குடும்பங்கள்ல உறவுச் சிக்கலுக்கு காரணமாயிடுது.

என் மனைவி பேர்லயும் தப்பு இருக்கு ஒத்துக்குறேன்.அன்பு இருக்குற இடத்துல சகிப்புத்தன்மைக்கு வேலையில்லை.ஆனா அன்பு, பாசம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை இதெல்லாம் இருவழிப்பாதையா இருக்கணும்.பல குடும்பங்கள்ல இதெல்லாம் ஒருவழிப்பாதையாயிடுச்சு.அதோட விளைவுகள்தான், இவ்வளவு முதியோர் இல்லங்களும், குடும்பநல நீதிமன்றங்களும், சமீப காலமா பிள்ளை என்னைக் கவனிக்கலைன்னு பெத்தவங்க கொடுக்குற புகார்களும்.” என்று சொன்ன வாசுதேவனின் முகத்தைப் பார்த்தேன்.

தூக்கிய சுமையை நெடுநேரம் கழித்து இறக்கிவைத்தவர் போல் அவருடைய முகம் தெளிவாக இருந்தது.
இவரைப்பொறுத்தவரை மனதில் உள்ள கவலைகளை நியாயமான முறையில் பேசினார்.இதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்க ஆட்கள் இருந்தாலே, இவரைப்போன்ற முதியவர்கள் மனதில் சலனமில்லாமல் இருப்பார்கள் என்று  எனக்குத் தோன்றியது.

“நீங்க சொன்னதெல்லாம் சரிதான் அய்யா...ஆனா மரணத்தை முடிவுசெய்யுறது கடவுள்தான்.பல பேரோட பசியைப்போக்கிய எனக்கு சரியான சாப்பாடு இல்லை. அது போன ஜென்மத்துல செய்த பாவமாத்தான் இருக்கும்னு நீங்களே சொல்லிட்டீங்க.இப்போ உங்க மனைவியை உலகத்தை விட்டு அனுப்பி ஏன் இன்னும் பாவத்தை சுமக்க நினைக்குறீங்க?

இந்த ஜென்மத்துல நீங்க செய்த புண்ணியங்கள் மட்டுமே உங்க கணக்குல இருக்கட்டுமே.தயவு செய்து அந்த மாத்திரைகளைக் கொடுங்க.” என்று நான் கேட்டதும் அவர் கண்களில் கண்ணீர்.ஆனால் முகத்தில் பிரகாசம்.

“என்னை மாதிரி வயசானவங்க பேச ஆரம்பிச்சாலே கிழம் அறுக்க ஆரம்பிச்சிடுச்சுன்னு ஒதுங்கிப் போறவங்கதான் அதிகம்.ஆனா நீ ரொம்ப பேசலைன்னாலும் சொன்ன சில வார்த்தைகள் என் மனசுக்கு ஆறுதலா இருக்கு. நம்ம ஆயுளைத் தீர்மானிக்கிற உரிமையையே பகவான் நமக்குத் தரலை. அடுத்தவங்களுடைய வாழ்நாளைப் பற்றி முடிவுசெய்ய நான் யாரு?...பெரிய பாவம் செய்ய இருந்த எனக்கு நல்ல வழி காட்டிட்ட தம்பி. வீட்டுல இருக்குற மாத்திரைகளைத் தூக்கிப்போட்டுடுறேன். ” என்ற அவர் தன் கையில் இருந்த மாத்திரைகளை என்னிடம் தந்தார்.

“ஆனா ஒண்ணு தம்பி...என் மருமகளுங்க அவ்வளவு அசிங்கமான வார்த்தைகளால என் மனைவியைத் திட்டுறாங்க.இதையயல்லாம் வாங்கிகிட்டு அவ இருக்குறதைவிட போய்ச் சேருறது மேல்னு நினைச்சுதான் தூக்கமாத்திரைகளைக் கொடுக்க முடிவு செஞ்சேன்.” என்று மீண்டும் கண்கலங்கினார்.

அடுத்த சில நாட்களில் வாசுதேவனின் மனைவி பத்மா, கீழே விழுந்ததில் நினைவிழந்து விட்டார்.இரண்டு நாட்கள் அதே நிலையில் இருந்து அவருடைய உயிர் பிரிந்தது.

நான் வாசுதேவனின் வீட்டுக்குச் சென்றபோது அவருடைய மருமகள்கள், அவர்களுடைய உறவுக்கார பெண்களைக் கட்டிக்கொண்டு, “ஆயுசுக்கும் இவங்களுக்கு சேவை செய்யணும்னு நினைச்சோமே...இப்படி எங்களை அநாதையா தவிக்கவிட்டுட்டு போயிட்டாங்களே...” என்று அழுதார்கள்.

எனக்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டேன். அதுவரை பேசாமல் இருந்த வாசுதேவன் என் கைகளைப் பிடித்துக்கொண்டு,“தம்பி...என் மனசு சஞ்சலப்பட்டது அவளுக்கு எப்படியோ தெரிஞ்சுடுச்சு...அதான் உங்களுக்கு எந்த பாவமும் வேண்டாம்...நானே போயிடுறேன்னு அவ வாழ்க்கையை முடிச்சுட்டு போயிட்டா...இனிமே எனக்கு யாரு இருக்கா...நான் அனாதையா நிக்கிறேனே...” என்று கதறியவரைத் தேற்ற எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
****************************************

கதை ஏற்கனவே 2010ஆம் ஆண்டு வலையேற்றப்பட்டது. எனவே இது பழசு பாதி புதுசு பாதி என கலந்து எழுதப்பட்ட பதிவு.

வியாழன், 6 டிசம்பர், 2012

நண்பன்

12-12-2012 தேதியிட்ட தேவி வார இதழில் பிரசுரமான சிறுகதை

1996ஆம் ஆண்டு கோடை விடுமுறை தொடங்கிய நேரம்:

திருவாரூர் அய்யனார் கோவில் தெருவில் இருந்த முடிதிருத்தகத்தின் வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்ச்சில் இரண்டு சிறுவர்களின் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள்.

"டேய்...வர்ற 9ஆம் தேதி இந்தியன் படம் ரிலீசாகுதுடா...­ஷங்கர் டைரக்சன். படம் சூப்பரா இருக்கும். கமல் ஹீரோ.கேட்கவா வேணும்...தைலம்மை தியேட்டர்ல வரப்போகுது. நான் முதல்நாளே போய்டுவேம்பா...'' என்றான் வடிவேல்.

"ச்சே...நம்ம ஊர்ல ஏ/சி தியேட்டர் இல்லடா. இருக்குற தியேட்டர்லயும் ஏசி மிசின் ரிப்பேராயிடுச்சாம். இங்க பாரேன். தஞ்சாவூர் விஜயா ஏ/சி, குடந்தை விஜயா ஏ/சி, மாயவரம் விஜயான்னு போட்டிருக்கு. மூணு ஊர்லயும் ஒரே தியேட்டரா பார்த்து படத்தை குடுத்துருக்காங்க.''என்ற மற்றொரு சிறுவனான பிரசாத்தின் பேச்சில் வியப்பு தெரிந்தது.

"அது வேற ஒண்ணும் இல்லடா...இந்த விஜயா தியேட்டர் எல்லாம் படத்தை திருச்சி ஏரியாவுல டிஸ்ட்ரிபியூட் பண்ற முருகன் பிக்சர்ஸ் காரங்களோடதுதான் . அதுனாலதான் அவங்க தியேட்டர்லயே ரிலீஸ் பண்றாங்க.''

"இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்?'' என்று பிரசாத் கேட்கவும்,

வடிவேல் முகம் நிறைய பெருமையுடன், ""சோழா தியேட்டர்ல ஆப்ரேட்டரா இருக்குறவர் என் பிரண்டு வீட்டு மாடியிலதான் குடியிருக்கார். அவருதான் இந்த செய்தியெல்லாம் சொல்லுவாரு. ம்ப்ச். என்ன...இந்தியன் படம் தைலம்மையில வராம சோழா தியேட்டர்ல வந்துருந்தா நான் க்யூல நின்னு டிக்கட் வாங்காம அவரோடயே நேரே உள்ள போயி....'' என்று பேசி முடிக்கும் முன்பே முதுகில் அடி விழுந்தது.

வடிவேல் கையில் இருந்த பேப்பரை பிடுங்கி கடைக்குள் வீசிவிட்டு அவன் முதுகில் கிருஷ்ணமூர்த்தி மத்தளம் வாசித்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜெயராமன், பதறிப்போய் சைக்கிளை விட்டு இறங்கினார். வடிவேலுடன்  நின்றுகொண்டிருந்த பிரசாத் திரும்பிப்பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்தான்.

"அப்பா...அடிக்காதீங்கப்பா...பேப்பர் படிச்சா என்னப்பா தப்பு...'' என்று அலறியதை பொருட்படுத்தாமல் கிருஷ்ணமூர்த்தி தன் மகனை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார்.

"யோவ் கிருஷ்ணமூர்த்தி, அவன் உடம்பு என்ன இரும்பா...இந்த அடி குடுத்து புரட்டி எடுக்குற?'' என்று ஜெயராமன் அடிவாங்கிக்கொண்டிருந்த வடிவேலுவுக்கு ஆதரவாக பேசவும், அவன் வந்து இவர் பின்னால் ஒளிந்தான்.

"உனக்கு விஷ­யம் தெரியாது கிருஷ்ணமூர்த்தி. ஒரு வீட்டுல எல்லா புள்ளையும் ஒரே மாதிரி இருக்காதுன்றது சரியாப்போச்சு. இவனுக்கு மூத்த பிள்ளைங்கள்ல  ஒருத்தன் பதினொன்னாவது படிக்கிறான். இன்னொருத்தன் ஒன்பதாவது படிக்கிறான். அவனுங்க பாடப்புத்தகத்தை தவிர வேற எதையும் புரட்டிக்கூட பார்க்க மாட்டானுங்க. ஆனா இவன் எந்த நேரத்துல பொறந்தான்னே தெரியலை.

யார் வீட்டுல கதைப்புத்தகத்தைப் பார்த்தாலும் எடுத்து வெச்சுகிட்டு உட்கார்ந்துடுறான். இப்ப புதுசா பேப்பர் படிக்க எங்க போய் பழகுனான்னு தெரியலை. ஏழாவது படிக்கிறதுக்குள்ள எந்த தியேட்டர்ல என்ன படம்...அந்த தியேட்டருக்கு யார் முதலாளின்னு ஆராய்ச்சி பண்றது உருப்புடுறதுக்கா...

அப்புறம் என்னை மாதிரி ஏதாவது துணிக்கடையிலேயோ, மளிகைக்கடையிலேயோ கூலி வேலை பார்க்குறதுலேயே ஆயுசு போயிடும். இதை இவனுக்கு எப்படி புரிய வெக்கிறது?'' என்று தலையில் அடித்துக்கொண்டார் கிருஷ்ணமூர்த்தி.

"சின்ன பையனுக்கு என்னய்யா தெரியும்...கொஞ்ச நாளானா சரியாயிடுவான். பள்ளிக்கூடத்துல சரியா படிக்காம இப்படி கண்டதையும் படிச்சா தப்பு. ஆனா கிளாஸ்லேயே நானூறு மார்க் எடுக்குற  ஒரே ஆள் உன் புள்ளை தான்னு நீயே சொல்லியிருக்க.''என்று ஆறுதலாக பேசினார் ஜெயராமன்.

"பாடப்புத்தகத்தை ஒழுங்கா படிச்சா நானூத்தம்பதுக்கு மேல எடுக்கலாம்னுதானே இந்த கருமத்தையயல்லாம் படிக்காதேன்னு சொல்றேன்.''

அவ்வளவு அடி வாங்கியும் வடிவேல், "படிச்சா என்ன தப்பு' என்றுதான் சொன்னானே ஒழிய இனிமே இப்படி செய்யமாட்டேன் என்ற வார்த்தை அவன் வாயில் இருந்து வரவே இல்லை.

இந்த பிரச்சனை இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உணர்ந்த ஜெயராமன்,  "ரொம்ப அடிக்காதய்யா...பயந்துடப்போறான்'' என்று கிருஷ்ணமூர்த்தியை சமாதானப்படுத்த பார்த்தார்.

"எது...இதுவா பயப்படப்போகுது'' என்று சொன்னவாறே வடிவேலை எட்டி உதைக்க கிருஷ்ணமூர்த்தி முயற்சித்தபோது, சட்டென்று வடிவேல் நகர்ந்துவிட்டான். இதை எதிர்பார்க்காமல் கீழே விழப்போன கிருஷ்ணமூர்த்தியை ஜெயராமன் தாங்கிப்பிடித்தார்.

"எதுவா இருந்தாலும் வீட்டுல வெச்சுக்க...இப்போ உன் மானம்தான் போகுது. கெளம்புப்பா...'' என்று ஜெயராமன் கிருஷ்ணமூர்த்தியை ஒருவழியாக புறப்பட வைத்தார்.

"வீட்டுல, வெளியில, கடையிலன்னு என்கிட்ட இவன் எங்கதான் உதை வாங்கல...ஆனாலும் திருந்த மாட்டெங்குறான். மூணுல ஒண்ணை கோயிலுக்கு நேர்ந்து விட்டதா நினைச்சுக்க வேண்டியதுதான். எல்லாம் தலைவிதி. அப்புடி இந்த பேப்பர்ல என்னதான் இருக்கு? ஒண்ணு கொலையைப் பத்தி போடுறாங்க. இல்ல கொள்ளை. அதை விட்டா சினிமா. இதைப் படிச்சுகிட்டே இருந்தா சோறு போடுமா? நான் படிக்கும்போதும் சரி. இப்பவும் சரி. பேப்பரை பார்த்தாலே பத்திகிட்டு வருது.'' என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு கிருஷ்ணமூர்த்தி சென்றுவிட்டார்.

ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரியும் ஜெயராமன் சில காலம் கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு அருகில் குடியிருந்தபோது பழக்கம்.

"நாளைக்கே உடம்பு முடியாம படுத்துட்டா அந்த ஜவுளிக்கடையில இருந்து மொத்தமா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. இவனுங்களை கடன் வாங்கி பெரிய படிப்பு வைக்க முடியுமா? நல்ல மார்க் எடுத்துட்டா பணம் குறைவா இருக்குற காலேஜ்ல சேர்த்துடலாம். மூத்தவனுங்க ரெண்டு பேரும் என் பேச்சை கேட்டு ஒழுங்கா படிக்கிறாங்க. சின்னதுதான் தறுதலையா நிக்கிது' என்று அடிக்கடி ஜெயராமனிடம் கிருஷ்ணமூர்த்தி புலம்புவார்.

"வடிவேலு நல்லாத்தான் படிக்கிறான். அது போதாதுன்னு அவனை கரிச்சு கொட்டிகிட்டே இருக்காரு...' என்று கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கனகவள்ளி  மகனை விட்டுக்கொடுக்காமல் பேசுவாள்.

ஆனால் யாருடைய சமாதானமும் கிருஷ்ணமூர்த்தியிடம் எடுபடாது.

+++

ஜெயராமன் பணிபுரிந்த நிறுவன முதலாளிக்கு காரைக்குடியில் ஒரு கிளை இருந்தது. அங்கே பொறுப்பான ஆள் தேவைப்படவே, ஜெயராமன் காரைக்குடிக்கு ஜாகையை மாற்றினார். ஆண்டுகள் ஓடியதே தெரியவில்லை.

வேலையை விட்டு ஓய்வு பெற்ற பிறகு, மருமகளுக்கு அவரை தங்களுடன் வைத்திருக்க விருப்பமில்லாமல் போய்விடவே, ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருந்தாள். அவர் மகனும் தன் மனைவியை கண்டிக்கவே இல்லை.

இவருக்குதான் ரோ­ம் அதிகம் ஆயிற்றே. மனைவியை அழைத்துக்கொண்டு திருவாரூருக்கு வந்துவிட்டார்.

+++

2011ஆம் ஆண்டு மார்கழி மாதம் அதிகாலையில் பனிபொழியும் நேரம்:

டீக்கடை, சலூன் என்று எங்காவது வடிவேலு பேப்பர் படிப்பதை பார்த்தால் விரட்டி விரட்டி அடித்து துரத்திய கிருஷ்ணமூர்த்தியை 16 ஆண்டுகளுக்குப்பிறகு அந்த நிலையில் ஜெயராமன் எதிர்பார்க்கவே இல்லை.

திருவாரூர் பெரிய கோவிலில் மார்கழி மாதம் திருப்பள்ளியெழுச்சி பூஜை முடிந்ததும் தியாகராஜர் சன்னதியை விட்டு பக்தர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். உள் பிரகார வாசலில் வழக்கம்போல் வெண்பொங்கல் பிரசாதம் வினியோகம் நடந்துகொண்டிருந்தது. ஜெயராமன் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் பிரசாதத்தை வாங்கிக்கொண்டார். வெறும் கையில் பொங்கலை வாங்கிய சிலர்  சூடு தாங்காத காரணத்தால் உள்ளங்கையில் அந்த பொங்கலை பந்து போல் உருட்டி சமாளித்துக்கொண்டிருந்தனர்.

இதே மாதிரி நடக்கும்னு எதிர்பார்த்துதானே நான் வீட்டுல இருந்து பிளாஸ்டிக் பை எடுத்துட்டு வந்தேன் என்று நினைத்தபடி இரண்டாம்பிரகாரத்தில் வலம் வந்த ஜெயராமனின் முகத்தில் சில்லென்று ஊசி குத்துவது போல் பனிச்சாரல் அடித்தது. நான்கு அடி தூரத்துக்கு அப்பால் வந்தவர்களின் முகம் தெரியவில்லை. காதுக்குள் காற்று நுழையாதவாறு மப்ளரை சுற்றியிருந்தாலும் அதை மீறி  குளிர் தாக்கியதால் மீதமிருந்த ஒன்றிரண்டு பற்கள் மோதிக்கொண்டன.

கொஞ்ச நேரம் பேப்பர் படிச்சுட்டு கிளம்பினா ஓரளவுக்கு பனிமூட்டம் விலகிடும் என்று நினைத்தவாறே கோயில் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள நூலக அறைக்குள் நுழைந்த ஜெயராமன் அங்கே அமர்ந்து நாளிதழ் படித்துக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்ததும் வியப்பில் வாய்பிளந்துவிட்டார். "அய்யா...கிருஷ்ணமூர்த்தி...என்னைத்தெரியுதா?''என்று கேட்டவாறு அருகில் வந்த ஜெயராமனை அவர் ஏறிட்டு பார்த்தார்.

"அடடே...என்னப்பா ஜெயராமா...ரொம்ப வரு­மா ஆளையே காணோம்...நான் தினமும் கோயிலுக்கு வர்றேன் உன்னைப் பார்க்கவே இல்லையே...''என்று கிருஷ்ணமூர்த்தியின் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.

அருகில் இருந்து நாளிதழ்கள் படித்துக்கொண்டிருந்த மற்ற வாசகர்கள் சட்டென்று இவர்களைப் பார்த்தார்கள்.

"சாரிங்க...''என்று கிருஷ்ணமூர்த்தி அந்த நூலகத்திலிருந்தவர்களைப் பார்த்து சொல்லி விட்டு, கமலாம்பாள் சன்னதிக்கு செல்லும் வழியில் கோயில் அலுவலகத்தின் பக்கவாட்டில் இருக்கை போன்ற அமைப்பில் வசதியாக ஜெயராமனுடன் அமர்ந்தார். இப்போதும் பனி மெல்லிய சாரல் மழையாக பெய்துகொண்டே இருந்தது.

"என்ன ஜெயராமா...காரைக்குடிக்கு போனதுக்கு அப்புறம் ரெண்டு வரு­ம் கடிதம்  போட்ட. அப்புறம் சுத்தமா தொடர்பே இல்லையே...என்னாச்சு.'' என்ற கிருஷ்ணமூர்த்தியின் குரலில் பழைய சிநேகிதனை மீண்டும் பார்த்த ஆர்வம் தெரிந்தது.

"ம்ப்ச்...அதை ஏம்பா கேட்குற...மருமகளுக்கு நாங்க இருக்குறது புடிக்கலை போலிருக்கு. நடந்தா தப்பு. உட்கார்ந்தா தப்புன்னு ஒரே இம்சை. டாய்லட்ல தண்ணி ஊத்தலைன்னு மகன் கிட்ட புகார் செய்யுறா. இதுக்கு மேல அவமானம் தேவையான்னு இங்கேயே வீடு பார்த்து பொண்டாட்டியோட வந்துட்டேன்.

ஆர்டிஆர் கம்பெனியில வேலைக்கும் சேர்ந்துட்டேன். மார்கழி மாசத்துல ஒரு நாள் காலையில மரகதலிங்க தரிசனம் பார்க்கணும்னு ஆசை. வந்துட்டேன். நாளைக்கெல்லாம் எழுந்து வர முடியாது போலிருக்கு. ஏழு மணிக்கு வேலை முடிஞ்சிடும். வீடு எங்க அதே இடம்தானே. முடிஞ்சா வர்றேன். இனி எங்க உயிர் போறது இந்த ஊர்லதானே'' என்று பேசிய ஜெயராமனின் குரலில் விரக்தி தெரிந்தது.

"பொழுது விடிஞ்ச நேரத்துல இது என்ன பேச்சு. நாங்க இருந்த வீட்டு மாடியை வாடகைக்கு விட்டுட்டு கீழே நாங்க வந்தா போனா தங்குறதுக்கு வச்சிருக்கோம். இன்னும் ஒரு வாரம் இங்கதான் இருப்பேன். வர்றதுன்னா, போன் பண்ணிட்டு வா.''என்று ஒரு துண்டு சீட்டில் நம்பரை எழுதிக் கொடுத்தார் கிருஷ்ணமூர்த்தி.

"நீங்களும் இந்த ஊர்ல இல்லையா. அது கெட்டுச்சு போ. எங்க சென்னையா?''

"எப்படிப்பா கரெக்டா சொல்ற?''

"நம்ம ஊர்ல இருந்து சென்னைக்கு போனது போக மிச்சம்தானே வேற ஊர்களுக்கு போறது. அது சரி...நீ மட்டும்தான் வந்துருக்கியா. மனைவி, பிள்ளைங்க எல்லாம்?''

"மனைவி தவறி ஆறு வரு­ம் ஆயிடுச்சு. பையன் மனைவியோட பத்து நாள் டூர் போயிருக்கான். நான் இங்க வந்துட்டேன்.''

"அடடா...கனகவள்ளி இறந்த வி­ஷயம் எனக்கு தெரியலையே. பத்து நாள் டூர் போற புள்ள உன் ஒரு ஆளை இப்படியா மார்கழி மாச குளிர்ல தவிக்க விட்டுட்டு போறது? அது சரி...உனக்கு மூணு புள்ளைங்களாச்சே. ஒருத்தன் டூர் போயிருக்கான்னா மத்தவங்க? மூணு பேரும் நல்லாத்தானே இருக்காங்க. சின்னவன் உருப்படியா எதாவது வேலைக்கு போறானா?''

"அது பெரிய கதை. மூணு பசங்களுமே இஞ்சினியரிங் தான் படிச்சாங்க. பெரிய பசங்க ரெண்டுபேருமே குடும்பத்தோட அமெரிக்காவுல இருக்காங்க. சின்னவனும் சென்னை டிசிஎஸ் கம்பெனியில  மாசம் நாப்பதாயிரம் ரூபா சம்பளம் வாங்குறான். நாலு மாசத்துக்கு முன்னாலதான் கல்யாணமாச்சு. அவன் மனைவி வேலை பார்க்குறதும் அதே கம்பெனிதான். புதுசா கல்யாணம் ஆனவங்க. இதுல நான் வேற எக்ஸ்ட்ரா லக்கேஜா கூட போகணுமா?

ஒரு குழந்தை பிறக்குறதுக்குள்ள இப்படி டூர் போய் ஜாலியா இருந்தாதான். அப்புறம் குழந்தை, பணிச்சுமைன்னு ஆயிட்டா எங்கேயும் போக முடியாது. அதே வீடு, அதே கம்பெனி, அதே முகங்கள், ஏன் டிவியில கூட அதே மெகா சீரியல்னு இருந்தா குடும்பத்துக்குள்ள ஏன் உரசல் வராது?

ஆனா, முதல்ல நீங்க ஆசைப்பட்ட கோயில்கள் சிலதுக்கு போயிட்டு வந்துடலாம்னு என் புள்ளையும் மருமகளும் கூப்பிட்டாங்க. நான்தான், இப்ப நீங்க விருப்பப்பட்ட இடத்துக்கு போங்க. பேரனோ, பேத்தியோ பிறந்த பிறகு நானும் வர்றேன்னு சொல்லிட்டேன்.

சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத...நாம தூக்கி வளர்த்த புள்ள நம்மள கண்டிச்சுட்டான்னு கோபப்படுறோமே...அறுபது வயசைத் தாண்டி நமக்கே இவ்வளவு ஈகோ இருக்குன்னா முப்பது வயசுல இருக்குற புள்ளைக்கும் மருமகளுக்கும் எவ்வளவு இருக்கும்.

நாம பெத்து வளர்த்த புள்ளை நம்ம நடவடிக்கையை குத்தம் சொல்றானேன்னு கோபப்படுறோம். அதுவே நெருங்கிய நண்பன் சொன்னா தப்பா எடுத்துப்போமா? அந்த மாதிரி புள்ளையையும் நண்பனா நினைச்சா ஏன் கோபம் வரப்போகுது?'' என்று பேசிய கிருஷ்ணமூர்த்தியின் பேச்சில் மட்டுமல்ல. முகத்திலும் அமைதி தெரிந்தது.

"நீ சொல்றதை நான் ஒத்துக்க மாட்டேன். அவன் வயசைத் தாண்டிதானே நாமளும் வந்துருக்கோம். நமக்கு தெரியாத நாகரிகமா?'' என்ற ஜெயராமனின் குரலில் லேசான காரம்.

"இந்த ஈகோதான்யா நிறைய குடும்பத்தை குலைச்சுப் போட்டுடுது. நம்ம காலத்துல பொண்ணுங்களுக்கு வேற வருமானம் கிடையாது. வேற வழியில்லாம புரு­னையும், மாமனார் மாமியாரையும் அவங்க இம்சைகளோட சகிச்சுகிட்டு இருந்தாங்க. இப்ப காலம் மாறிப்போச்சு.

புரு­னோட அஞ்சு நிமிஷ­ம் தனியா உட்கார்ந்து பேசிகிட்டு இருக்குறதைக் கூட குற்றம் சொல்ற மாமனார், மாமியார் அதிகம். அவங்க மனசு விட்டு பேச சந்தர்ப்பம் கிடைச்சா, மனசுல இருக்குற தேடல் குறைஞ்சுடும். எதையும் எரிச்சலோட பார்க்குற மனோபாவம் மாறிடும்.

இந்த மாதிரி சின்ன சின்ன விஷ­யங்கள்ல கிடைக்கிற சின்னப்புள்ளைத்தனமான ஏமாற்றம்தான் குடும்பத்துல பெரிய பிரச்சனையை உருவாக்குது. புள்ளை தன் பொண்டாட்டியோட சினிமாவுகோ கோயிலுக்கோ கிளம்பி போனதுக்கப்புறம், அக்கம்பக்கத்து வீடுகள்ல, நான் இங்க ஒருத்தி சமையலறையில கிடந்து அல்லாடிகிட்டு இருக்கேன். அவ எதைப்பத்தியும் கவலைப்படாம புருஷ­னோட ஜோடி போட்டு கிளம்பிட்டான்னு பேசுற மாமியார்கள் எவ்வளவு பேர் இருக்காங்கன்னு தெரியுமா?

இந்த வி­ஷயம் இன்னும் பல மோசமான வார்த்தைகளோட மகன் மருமகள் காதுக்கு போகும்போது விரிசல் ஆரம்பமாகுது.

ஜோடியா சந்தோஷ­மா இருக்கணும்னுதானே கல்யாணம் பண்ணி வெச்சோம். இப்ப பெரியவங்களே அதைப்பார்த்து எரிச்சலடைஞ்சா என்ன அர்த்தம்.'' என்ற கிருஷ்ணமூர்த்தி ஜெயராமனைப் பார்த்தார்.

"வெளில போய்ட்டு நல்லா சுத்திப்பார்த்துட்டு வாங்கன்னு அனுப்புனா மட்டும் மாமனார் மாமியார் மேல மருமகளுக்கு பாசம் வந்துடுமா?''என்று ஜெயராமன் எரிச்சலுடன் கேட்டார்.

"பாசம் வருதோ இல்லையோ, மாமனார் மாமியார் நம்மளுக்கு இடைஞ்சலா இருக்காங்கன்னு ஒரு எண்ணம் வராது. பையன் ஆபீஸ்லேர்ந்து சீக்கிரம் வந்துட்டான்னா, டிபன் நான் பண்ணி வைக்கிறேன். ரெண்டு பேரும் வெளில போயிட்டு வாங்கன்னு சொல்லிப்பாருங்க. அது புள்ளைக்கும் மருமகளுக்கும் எவ்வளவு சந்தோஷ­த்தை கொடுக்கும் தெரியுமா?

ரெண்டு தடவை அப்படி நடந்தா, மூணாவது தடவை கிளம்பும்போது உங்களுக்கும் சேர்த்து டிபன் செஞ்சு வெச்சுட்டு கிளம்புவா. இல்லன்னா, நீங்க சிரமப்படவேண்டாம். "நாங்க ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு உங்களுக்கும் வாங்கிட்டு வந்துடுறோம் அத்தை.' அப்படின்னு சொல்லுவா. தொண்ணூறு சதவீதம் இப்படித்தான் நடக்கும்.

அதை விட்டுட்டு, எங்க காலத்துல அப்படி செஞ்சோம். இப்படி இருந்தோம் அப்படின்னு குறை சொல்லிகிட்டே இருந்தா நம்மளை எப்படா அடிச்சு முதியோர் இல்லத்துக்கு துரத்தலாம்னுதான் யோசிப்பாங்க.

அந்த காலத்துல நடந்து போனாம். ஏதாவது முக்கிய செய்தின்னா தந்தி அடிப்போம். இல்ல டிரங்கால் புக் பண்ணி பேசுவோம். இப்ப அப்படியா? எவ்வளவு வசதிகளை அனுபவிக்கிறோம். அந்த மாதிரி புள்ளைங்க விஷ­யத்துலயும் நம்ம அணுகுமுறையை மாத்திக்கணும்.'' என்று கிருஷ்ணமூர்த்தி தெளிவாகவே பேசினார்.

"அதுசரி...உனக்கு எப்படிய்யா இவ்வளவு பக்குவம் வந்துச்சு? நல்ல மருமக கிடைச்சதுனால இப்படி பேசுறியா? எல்லாத்துக்கும் குடுப்பினை வேணும். எனக்கு வந்து வாய்ச்ச மருமக ராட்சசியால்ல இருக்கா.'' ஜெயராமனின் குரலில் விரக்தி தெரிந்தது.

"நான் இந்த மாதிரி பக்குவப்பட காரணமே என் சின்னப் புள்ளைதான். மூத்தவனுங்க ரெண்டுபேரும் படிப்பு படிப்புன்னு இருந்தாங்க. வேலை கிடைச்சதும் அம்மா அப்பாவை வெச்சு பார்த்துக்கணும்னு நினைக்கவே இல்லை.

ஆனா வடிவேல், நீங்க காலம் பூராவும் என் கூடவே இருந்துடுங்கன்னு சொல்லிட்டான். மருமகளும் கல்யாணமாகி வந்த புதுசுல, உங்க அப்பா மூணு புள்ளைங்ககிட்டயும் ஆளுக்கு ஒருமாசம்னு இருந்து சாப்பிடுறதுதானே நியாயம்னு கேட்டா. ஆனா இவன், அப்பா அம்மாவை வெச்சு பார்த்துக்க லாப நஷ்ட கணக்கு பார்க்க கூடாது. ஆயிரக்கணக்கான ஏழைங்களுக்கு அன்னதானம் செய்யுறது, கோவில் உண்டியல்ல லட்ச லட்சமா பணம் போடுறதைக் காட்டிலும் பெத்தவங்களை வெச்சு காப்பாத்துறது உயர்ந்த விஷ­யம்.

அதை செய்ய நமக்கு வாய்ப்பு கொடுத்த அண்ணன்களுக்கு நன்றி சொல்லணும். அவருக்கு நான் ஒரே புள்ளையா பிறந்ததா நினைச்சு என் கூடவேதான் வெச்சுப்பேன். உன்னால முடியலைன்னா விடு. எங்க அப்பாவை நான் பார்த்துக்குவேன்னு சொன்னான். அதுக்கு  அவன் மனைவி, என் அம்மா அப்பாவை நான் இந்த மாதிரி கூட வெச்சுக்க அனுமதிப்பீங்கிளான்னு கேட்டா.

இதுக்கு என் அனுமதி எதுக்கு. தாராளமா வந்து இருக்கலாம். ஆனா அவங்க சம்மந்தி வீட்டுல போய் தங்குறதான்னு யோசிப்பாங்க. அப்படி நினைச்சா, தனி வீட்டுல இருக்கட்டும். வேணுன்னா தனியா வீடு புடிச்சு கொடுத்து மாசத்துல பாதி நாள் நாம அவங்க கூட போய் தங்குவோம். அப்படின்னு சொன்னான். அவன் மனைவி மறு பேச்சு பேசலை. உங்க குணத்தை இப்பதான் முழுசா புரிஞ்சுகிட்டேன்னு சொல்லி அழுறா.

வடிவேலுக்கு இந்த பக்குவத்தை கொடுத்தது, புத்தகங்கள்தான். பேப்பரை கூட படிக்க கூடாதுன்னு அவனை எத்தனையோ நாள் அடிச்சு துவைச்சிருக்கேன். ஆனா அந்த வாசிப்பு பழக்கம்தான், என்னைய நடுத்தெருவுல நிறுத்தாம அவன் கூட வெச்சு பராமரிக்கிற குணத்தை கொடுத்திருக்கு. ஒருத்தனுக்கு நல்ல புத்தகத்தை விட சிறந்த நண்பன் வேற யாரும் இருக்க முடியாதுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க.

கடைசியா ஒண்ணு சொல்றேன். பெத்தவங்க, நம்ம புள்ளை நம்மளை வெச்சு பராமரிக்கணும்னு நினைச்சா சந்தோஷ­ம். ஆனா ஒவ்வொரு விஷயத்தையும் நம்மளை கேட்டுதான் முடிவெடுத்து நடக்கணும்னு நினைச்சா வருத்தம்தான் மிஞ்சும்.

காலம் மாறிப்போச்சுன்னு பேசிகிட்டு இருந்தா மட்டும் போதாது. நாமளும் பல விஷ­யங்கள்ல நம்மளை மாத்திக்கணும். மாதா, பிதா, குரு, தெய்வம்னு சும்மா மனப்பாடம் செஞ்சு எழுத வெச்சா ஒரு மனு­ஷன் மாறிட மாட்டான். அதை உணர வைக்கணும். என் புள்ளையை புத்தகங்கள் உணர வெச்சிருக்கு.'' என்று கிருஷ்ணமூர்த்தி சொல்லி முடித்தபோது, புத்தகங்கள் ஒரு மனுஷ­னை இந்த அளவு பக்குவப்படுத்துமா என்று நினைத்த போது, அவர் மகனும் மருமகளும் அவர் நினைவில் வந்து போனார்கள்.

+++