Search This Blog

புதன், 6 ஜூலை, 2016

ரகசியம் ஆவணப்படத்தில் இருப்பது - மந்திரமா - தந்திரமா



The
Secret என்ற ஆங்கில நூல் ரகசியம் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது  மின்னூலாகவும், ஆவணப்படம் (தமிழிலும் கூட) போன்றவை
சமீப காலமாக இணையத்தில் அதிகமாக பகிரப்படுகின்றன. அந்த ஆவணப்படத்தை நான் முழுமையாக
பார்த்தேன். உலகம் முழுவதும் ஈர்ப்பு விதியில்தான் இயங்குகின்றது என்ற கோணத்தில் வெற்றி
ரகசியம் அலசப்பட்டிருந்தது.




அதாவது
நல்லது, கெட்டது என்பதெல்லாம் ஈர்ப்பு விதிக்கு தெரியாது. நீங்க என்ன நினைக்கிறீர்களோ
அதைத்தான் அந்த ஈர்ப்பு விதி உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்கிறார்கள்.





நம்
முன்னோர்கள் “எண்ணம் போல் வாழ்வு” என்று ஒற்றை வரியில் சொல்லியிருப்பதை நாம் அலசி ஆராய்ந்து
பின்பற்றாமல் போய்விட்டோமோ என்று எண்ண வைத்தது இந்த வீடியோ.


சிலருக்கு
(ஏன் எனக்கு கூட) எந்த விசயம் நடக்கக்கூடாது, அதை நான் செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ
அதையே நாம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவது இந்த ஈர்ப்பு விதியினால்தான் இருக்குமோ?





இந்த
வீடியோவைப் பார்த்ததும் என் மனதில் வேறு சில எண்ணங்களும் எழுந்தன.





பிரபல
ஆன்மிகவாதியைப் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நாசர் நடித்த தமிழ்ப்படம் சகுனி. அந்தப்
படத்தின் ஒரு காட்சியில்,





“இவ்வளவு
பணம் ஏது சாமி” என்று கார்த்தி கேட்பார்.





“என்னிடம்
வந்த மக்களின் கஷ்டத்தை தீர்த்து வைத்தோம். அவர்கள் காணிக்கையாக பணத்தை கொண்டு வந்து
கொடுத்தார்கள்.”  – இது நாசரின் பதில்.





“மனசாட்சியை
தொட்டு சொல்லுங்க சாமி... நாமளா தீர்த்து வெச்சோம்...? கஷ்டத்தோட வந்தவனுக்கு ஆறுதல்
சொன்னோம். ஆறு மாசத்துல அந்த கஷ்டம் அவனுக்கு தன்னால சரியாயிருக்கும். அவனவன் வந்து
காசை கொட்டிட்டு போயிட்டான்... ” என்று கார்த்தி சொல்லவும், நாசர் அதை ஆமோதித்து அசடு
வழிவார்.





கடவுள்
நம்பிக்கையோ, தன்னம்பிக்கையோ... பிரார்த்தனை, பரிகாரம், தியானம் அல்லது எதுவோ ஒன்றை
செய்து முடித்தவுடன் நம் மனதில், இதை செய்து விட்டோம். அதனால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும்
என்று நம்பத்தொடங்குகிறோம். அந்த அதிர்வலைகள்தான் நம்பிக்கையின் ஆழத்தைப் பொறுத்து
நம் வேண்டுதலை நிறைவேற்றுகிறதோ என்ற கருத்து என் மனதில் தோன்றுகிறது.





சென்னையில்
உள்ள பிரபல ஜோதிடர் அவர். சினிமாத்துறை பிரபலங்கள் உட்பட பல துறை பிரபலங்கள் அவரது
வாடிக்கையாளர்கள். கேரளா உள்ளிட்ட இடங்களில் பலரையும் வைத்து பரிகாரம் செய்து தருவதால்
கட்டணமும் மிக அதிகம். அவரிடமும் பட்ஜெட் பேக் இருக்கிறது என்று நண்பர் ஒருவர் சென்றார்.
அந்த நண்பருக்கு மேற்படி ஜோதிடர் சில ஆயிரங்கள் கட்டணமாக பெற்றுக் கொண்டு நவரத்தினக்கற்கள்
பதித்த எந்திரம் ஒன்றை பிரேம் செய்து கொடுத்தார். அந்த கற்கள் இருக்கும் இடத்தில் விரலைக்
கொண்டு சென்றால் காந்தம் போல் இழுத்தது. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த
நண்பரிடம் இந்த எந்திரத்தை கொடுத்த ஜோதிடர் சொன்ன பிரார்த்தனை வழிமுறைகள் என்ன தெரியுமா?





பூஜை
அறையில் வைத்து அந்த எந்திரத்திற்கு தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாம்பிராணி
போட்டு ஏதாவது சின்ன அளவில் நைவேத்யம் செய்து, குறைந்தபட்சம் அரை மணி நேரம் நீங்கள்
எதிர்காலத்தில் என்னவாக ஆக விரும்புகிறீர்களோ அதை அடைந்து விட்டதாகவே கற்பனை செய்து
வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அந்த நண்பர் ஆற்றில் ஒரு கால்,
சேற்றில் ஒரு கால் கதையாக முழு நம்பிக்கையோடு இதை தொடரவில்லை என்று நினைக்கிறேன். இந்த
விசயத்தை அவர் சொன்னபோது எனக்கும் சாதாரணமாக தோன்றியது. ஆனால் “ரகசியம்” வீடியோவை பார்த்த
பிறகு இந்த ஈர்ப்பு விதியைத்தான் அவர் பூஜை பெயரால் செய்ய வைத்து சக்சஸ் கொடுக்கிறாரோ
என்ற எண்ணம் என் மனதில் எழுகிறது.







“ரகசியம்”
பற்றி நிறைய கேள்விகள், எண்ணங்கள் என் மனதில் எழுகின்றன. அவ்வப்போது அவற்றை பதிவிடுகிறேன்.


1 கருத்து:

  1. இரகசியம் என்ற நூலில் உள்ள விவரங்கள் அனைத்தும் தமிழ் நூல்களில் பரவி கிடக்கின்றன. ஆனால் நாம்தாம் அவற்றை புறந்தள்ளி விட்டோம்

    பதிலளிநீக்கு