04-12-2015 - இது உங்கள் இடம்
தினமலர் : சென்னை, புதுச்சேரி, மதுரை, கோயம்புத்தூர் பதிப்புகள்.
சரவணன், திருவாரூரிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்:
கணக்கு வைத்திருக்கும் கிளை தவிர, மற்ற கிளைகளில் பணம் செலுத்தினாலே, குறைந்தபட்ச கட்டணம், 25 ரூபாய் வசூலித்தது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி. கவுன்டர்களில், கூட்டம் அலைமோதுவதை தவிர்க்க, இப்படி செய்திருக்கின்றனர் என்று, வாடிக்கையாளர்கள் சமாதானம் ஆகினர்.
அனைத்து வங்கிகளும், ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க வரையறை வைத்தன. அவற்றில் பணம் நிரப்பவும், பராமரிப்புக்கவும் செலவுகள் இருக்கும் என்று, மக்கள் அதையும் ஏற்றனர்.
ஆனால், கடந்த நவம்பர் முதல், பணம்,
'டிபாசிட்' செய்யும் இயந்திரத்தில், பணம் செலுத்துவதற்கும், ஒரு பரிவர்த்தனைக்கு, 25 ரூபாய் வீதம், அந்த வங்கி கட்டணம் வசூலிக்கத் துவங்கியுள்ளது; இது, மிகவும் அநியாயம்!
பணம் செலுத்தும் இயந்திரத்தில் செலுத்தப்படும் பணம், மற்ற வாடிக்கையாளர்கள், ஏ.டி.எம்., அட்டை மூலம், தொகை எடுக்கவும் பயன்படுகிறது. அதனால், அடிக்கடி பணம் நிரப்பும் செலவு, வங்கி நிர்வாகத்துக்கு கிடையாது.
மேலும், வங்கிக்குள் சென்று, கவுன்டரில் பணம் செலுத்துவதால் ஏற்படும் நிர்வாக செலவும் மிச்சம். அது தவிர, வங்கி மற்றும் வாடிக்கையாளர் இருவருக்குமே நேரம் சேமிப்பு.
அதனால், இயந்திரத்தில் பணம் செலுத்துவதற்கும் கட்டணம் விதித்து, வாடிக்கையாளர்களை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்; இஷ்டத்திற்கு, வாடிக்கையாளரிடம் சுரண்டும் போக்கிற்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?இதை சம்பந்தப்பட்டோர் கவனிப்பரா?