Search This Blog

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

ஏன் கலவரம்? - இலக்கியச்சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு

வரும் திங்கள்கிழமை 14.04.2014 திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு இலக்கியச்சிந்தனை அமைப்பின் 44வது ஆண்டு நிறைவு விழா சென்னை-4, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, ஏவி.எம்.இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமுதசுரபி மாத இதழில் வசுமதி ராமசாமி நினைவு முத்திரை சிறுகதையாக நான் எழுதிய தேன்மொழியாள் சிறுகதையை திரு.பாலுமணிவண்ணன் தேர்வு செய்திருந்தார். அருவி என்ற தலைப்பில் அந்த ஆண்டு சிறுகதைத்தொகுப்பு வெளிவந்தது.

அந்த ஆண்டு முதல் எனக்கு இலக்கியச்சிந்தனையிலிருந்து தொடர்ந்து அழைப்பிதழ் வந்துவிடும். பல்வேறு காரணங்களால் என்னால் ஒரு முறை கூட அந்த விழாவிற்கு செல்ல முடிந்ததில்லை. இந்த ஆண்டும் அப்படித்தான் ஆகும் என்று தோன்றுகிறது.

சென்னையில் வசிக்கும், வாய்ப்பு இருக்கக்கூடிய நபர்கள் சென்று வாருங்கள்.

வெகுஜன வார இதழ்களில் வாரம் மூன்று முதல் ஐந்து சிறுகதைகள் ஒரு தொடர்கதை கூட பிரசுரமான காலம் உண்டு. மாதம் ஒரு சிறந்த சிறுகதையை தேர்வு செய்து அதிலிருந்து ஆண்டின் சிறந்த கதை என்று ஒன்றை தேர்வு செய்த காலம் போய் ஒரு ஆண்டில் வெளிவந்த கதைகளில் 12ஐ தேர்வு செய்யும் கதைப்பஞ்ச காலத்தில் இருப்பதாக இலக்கியச்சிந்தனை நிர்வாகிகள் வருத்தப்பட்டதாக எங்கேயோ படித்ததாக நினைவு.

இது உண்மைதான். தொடர்கதைகளின் இடத்தை தொ(ல்)லைக்காட்சிகளின் நெடுந்தொடர்கள் பிடித்துக்கொண்டன என்று கூறலாம். நல்ல எண்ணத்தை விதைத்த வகையில் என்று தவறாக எண்ணிவிட வேண்டாம். புத்தகம் படிக்க செலவழித்த நேரத்தை களவாடி சகிப்புத்தன்மையை அழித்து பிஞ்சு முதல் பெரியவர்கள் வரை அவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் காரியம்தான் 99.9 சதவீதம் நடந்து வருகிறது.

கற்றலின் கேட்டல் நன்று என்று கூறியிருப்பது தொ(ல்)லைக்காட்சிகளின் நெடுந்தொடர்களுக்கு பொருந்தாது என்பது என் மனதில் தோன்றிய கருத்து. நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் வரை (2003) வரை எங்கள் வீட்டில் தொ(ல்)லைக்காட்சி கிடையாது. சிறு வயதில் இருந்து பாடப்புத்தகத்தை காட்டிலும் கதைப்புத்தகங்கள் படித்ததுதான் அதிகம். ஆனாலும் நூலகம் அறிமுகமானது 1999 டிசம்பரில்தான். அப்போது முதல் 2003ல் கல்லூரிப்படிப்பு முடிக்கும் வரை நான் வாசித்த புத்தகங்கள் ஏராளம். அதிலும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் 5 பாகத்தையும் ஒரு வார காலத்துக்குள் வாசித்து முடித்தேன். அது சுகானுபவம்.

அந்த 4 ஆண்டுகளை ஒப்பிட்டால் அதன் பிறகு இந்த 11 ஆண்டில் நான் வாசித்தவை குறைவுதான். அதற்கு காரணம் வேலைப்பளு என்பதைக் காட்டிலும் 200 சதுரடி கொண்ட ஒற்றை அறையை மட்டுமே கொண்டது எங்கள் வீடு என்பதால் புத்தகம் படிக்க இடம் என்பது கிடைக்காமல் போய்விட்டது.

இதெல்லாம் சும்மா... மனசு வைத்தால் மலையைப் புரட்டி விடலாம் என்று கூறும் நண்பர்களுக்கு சில விஷயங்களைக்கூற விரும்புகிறேன். மன உறுதி பற்றி பேசுபவர்கள் எல்லாம் கையில் ஒரு புத்தகத்துடன் தொ(ல்)லைக்காட்சியில் நிகழ்ச்சியின் ஒளி, ஒலியை வைத்துக்கொண்டு அமர்ந்து படியுங்கள். அப்போது தெரிந்து விடும் உங்கள் மன உறுதி. (இதைத் தாண்டிய சத்தத்திலும் மனதை ஒருமுகப்படுத்துவது சிலருக்கு சாத்தியமாகலாம். பெரும்பாலானோருக்கு அதற்கு வாய்ப்பே இல்லை. அவர்களில் நானும் இருக்கிறேன்.

வீட்டை விட்டு வெளியில் வந்து அமர்ந்து படிக்க வேண்டியதுதானே என்று கேட்பீர்கள். கொசுக்களுக்கு பதில் சொல்ல என் உடலில் வலு இல்லை.

பவர் கட், வேறு ஏரியாவில் பவர் கட்டாகி எங்கள் வீட்டில் கேபிள் டி.வி தெரியாத நிலை என்றால் நிம்மதியாக படிப்பேன். (அந்த நேரத்தில் அம்மா, தாத்தாவுக்கு எதையாவது படித்துக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்து எரிச்சல் வருவது வேறு விஷயம்.)

படிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித சங்கடங்கள் இருந்தாலும் ஜோதிடம், ஆன்மீகம், பணம் சம்பாதிப்பது எப்படி? ஒரே வாரத்தில் சுவிஸ் பாங்கில் அக்கவுண்ட் ஓப்பன் செய்யும் அளவுக்கு கொள்ளையடிப்பது ... சாரி... சம்பாதிப்பது எப்படி என்பது போன்ற புத்தகங்கள்தான் அதிக அளவில் விற்பனையாவதாக சில புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வாசிப்பு அனுபவம் இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கும் காலத்திலும், இதழ்களில் சிறுகதைகள் பிரசுரமாவது அபூர்வமாகிவிட்ட நேரத்திலும் 44 ஆண்டுகளாக இலக்கியச்சிந்தனையின் பணி தொடர்ந்து கொண்டு இருப்பது பாராட்டத்தக்கது.

இந்த பணி தொடர பல்வேறு நபர்களும் பல விதத்தில் உதவி வருகிறார்கள். அவர்களுக்கு வாசகர் சார்பில் நன்றி.

கல்கி வார இதழில் சிறுகதைப்போட்டி அறிவிக்கப்பட்டுவிட்டது. அடுத்து தினமணி கதிர் - நெய்வேலி புத்தகக்கண்காட்சி சிறுகதைப்போட்டி, தினமலர் வாரமலர் போட்டி என்று வரும் மூன்று நான்கு மாதங்களும் சிறுகதைகளுக்கான போட்டிகள் நடைபெறும். கடைசியாக நான் 2010 ஆண்டு கலந்து கொண்டு ஒரு போட்டியில் 5ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு வாங்கியதுடன் சரி. சொந்த தொழில் செய்ய தொடங்கியதில் இருந்து உருப்படியாக எதையும் எழுதவில்லை. இந்த ஆண்டாவது சோம்பேறித்தனத்தை விட்டு எதையாவது எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன்.

இலக்கியச்சிந்தனை சார்பில் 2013ம் ஆண்டின் சிறந்த சிறுகதையென கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி தேர்ந்தெடுத்த பி.சுந்தரராஜன் எழுதிய தினமணி கதிர் 04-08-2013 இதழில் வெளியான ‘ஏன் கலவரம்?’ என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கதை பிரசுரமானபோதே படித்திருப்பேன். தினமணி இணையதளத்தில் இப்போது காணக்கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

5 கருத்துகள்:

  1. அழைப்பு இன்றி யார் வேண்டுமானாலும் செல்லலாமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம் என்று அழைப்பிதழில் இருக்கிறது. அழைப்பிதழ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றால் அதை அழைப்பிதழிலேயே தெளிவாக குறிப்பிட்டு விடுவார்கள். ஆக இலக்கிய ஆர்வம் இருப்பவர்கள் அனைவரும் செல்லலாம்.

      நீக்கு
  2. நண்பரே, சிறுகதைப் போட்டிகள் அறிவிப்பு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். போட்டிகள் குறித்த விதிமுறைகள், அறிவிப்புகள் போன்றவற்றை பகிர்ந்து கொண்டால்/ அந்த தகவல்கள் இருக்கும் பக்கங்களுக்கு இணைப்பு கொடுத்தால் பேருதவியாக இருக்கும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டி குறித்த விதிமுறைகள் பிரசுரமான பக்கங்களை scan செய்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு