Search This Blog

வெள்ளி, 24 மே, 2013

எல்.இ.டி மற்றும் சி.எப்.எல் விளக்குகள் கேடு விளைவிக்குமா?









மின்சிக்கனம், வெப்பம் குறைவு போன்ற பல்வேறு சாதகமான அம்சங்கள் இருக்கின்றன என்று மார்க்கெட்டுக்குள் நுழைந்த எல்.இ.டி விளக்குகள் நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக ஒரு செய்தி உலவுகிறது. இப்படி எல்லாம் நடக்காது என்று யாராலும் உத்திரவாதம் கொடுக்க முடியாது. ஏனென்றால் இயற்கையை மீறிய செயற்கை தன்னுடைய இன்னொரு முகத்தை பல்வேறு வடிவங்களில் வெளிக்காட்டிக்கொண்டேதான் இருக்கிறது.









Image Credit



பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருக்கும் குழல்விளக்கு (டியூப்லைட்) மற்றும் சி.எப்.எல் பல்ப்புகளில் ஒளியை பிரதிபலிப்பதற்காக உட்புறம் பூசப்பட்டிருக்கும் பாதரசம் இந்த பல்புகள் உடைந்தால் காற்றில் கலந்து ஏதோ ஒரு வேதியல் மாற்றத்திற்குள்ளாகி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.



ஆனால் எல்.இ.டி. விளக்குகள் இப்படி உடையும் வரை காத்திருக்காமல் அவற்றிலிருந்து வரும் ஒளிக்கற்றைகளே மனிதர்களின் விழித்திரைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுவது நமக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகத்தான் கருத வேண்டும். 





எல்.இ.டி.பல்ப் குறித்த எச்சரிக்கை கட்டுரை thinkspain என்ற இணையதளத்தில் கட்டுரை வெளிவந்ததாக புதியதலைமுறை 30.05.2013 இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற விளக்குகள் ஏற்படுத்தும் பாதிப்பு ஒருபுறமிருக்கட்டும். இது போன்ற வில்லங்கங்களை நம் உடைக்குள் விட்டுவிட்டு குத்துதே, குடையுதேன்னு புலம்புறதுக்கு யார் காரணம்?



கும்பமேளாவில் ஜனத்திரள் நீராட செல்வது போல் ஒரு நானோமீட்டர் அளவுக்கு கூட இடைவெளியில்லாமல் கட்டிடங்களை கட்டும் போக்கு அதிகரித்து வரும்போது இதுபோன்று பிரச்சனைகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிப்பதை தவிர்க்கமுடியாது. காற்றோட்டமான, நல்ல வெளிச்சம் தரும் வகையில் பகல் நேரத்தில் மின்விளக்கு, மின்விசிறி தேவைப்படாத அளவுக்கு வீடுகள் கட்டப்பட்டால்தான் இரவு நேரங்களில் அதிகபட்சம் 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே மின்விளக்குகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். அதை விடுத்து சின்னதா வீட்டை கட்டினா புழக்கத்துக்கு என்ன செய்யுறது என்று பன்னாட்டு நிறுவனத்தின் குளிரூட்டப்பட்ட எம்.டி அறையைப்போல் வீடுகளை கட்டினால் எல்.இ.டி விளக்குகள் மட்டுமல்ல இன்னும் என்னென்ன கேடுவிளைவிக்கும் என்று அந்த இயற்கையால் கூட உறுதியாக சொல்லமுடியாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக